Friday, July 13, 2012

அகிரா குரோசவா -உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-2)

1936 ஆம் ஆண்டில் உதவி இயக்குனராக களம் இறங்கிய அகிரா, ஐந்து ஆண்டுகளில் Yamamoto மட்டுமல்லாமல் பல முன்னணி இயக்குனர்களுடன் பணிபுரிந்தார், இருந்தாலும் Yamamoto வின் படங்களில் பணிபுரிந்ததே அதிகம். அன்றைய சினிமாத்துறையை பொறுத்த மட்டில் படிப்படியாக எடுபிடி வேலைகள் செய்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி உதவி இயக்குனர் என்ற நிலைக்கு வருவதற்கே சில ஆண்டுகள் பிடிக்கும்.ஆனால் அகிரா ஓராண்டிலேயே முதல் உதவி இயக்குனராக முன்னேறி தன் தனித்திறமைகளால் அடையாளம் காணப்பட்டார்.
இதன் காரணமாக ஒரு படம் இயக்கத் தேவையான அனைத்து அம்சங்களும் அதாவது திரைக்கதை சரி பார்த்தல்,ஆடை அலங்காரத் தேர்வு, தொகுப்பாக்கம், ஒலி சேர்
க்கை, நடிப்பு பயிற்சி அளிப்பது என அனைத்து  வேலைகளையும் செய்து வந்தார். அகிரா உதவி இயக்குனராக பணியாற்றிய 'Horse' படம் இயக்கும் தருவாயில், இயக்குனர் Yamamoto வேறு ஒரு படத்தில் ஈடுப்பட்டிருக்க,அகிராவே முழுமையாக அந்த படத்தினை இயக்கி முடித்தார். 
இந்த சமயத்தில் இயக்குனர் Yamamoto அகிராவிற்கு ஒன்றை உணர்த்தினார்.ஒரு சிறந்த இயக்குனர் ஆவதற்கு முதலில் திரைக்கதை அமைப்பதில் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றார். தன்னிடம் உள்ள திரைக்கதை அமைக்கும் சிறப்பினை உணர்ந்த அகிரா உதவி இயக்குனராக இருப்பதை விட திரைக்கதை அமைப்பின் மூலமாக அதிகப்பணம் ஈட்ட முடிவெடுத்தார். பின்னாளில் அவர் தன் படங்களுக்கு திரைக்கதை அமைப்பதோடு,பல்வேறு இயக்குனர்களுக்கும்  திரைக்கதை அமைத்து கொடுத்தார்.  Horse படம் திரைக்கு வந்து இரண்டு ஆண்டு காலம் சென்ற பிறகு அகிரா தானே படம் இயக்க முடிவெடுத்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் தான் japan - united kingdom   உடனான  போர் தொடங்க Tsuneo Tomita என்னும் எழுத்தாளர் 'Sanshiro Miyamoto' புத்தகத்தை வெளியிட்டார்.அந்தக்கதை அகிராவைக் கவர அதனைத் தழுவி படம் இயக்க முடிவெடுத்தார்.அதற்காக அந்தக்கதையின் ஆசிரியரை நேரில் சந்தித்து உத்தரவு வேண்ட,அகிராவைப் போலவே பல இயக்குனர்களும் அந்தக் கதைக்காய் வரிசையில் காத்திருந்தனர்,ஆனாலும் அகிரவிற்கே  கதைக்கான உரிமையை அந்த ஆசிரியர் கொடுத்தார்.
 

இதன்பின் 1942 இல் அகிரா Yokohoma என்னும் இடத்தில தனது முதல் படத்தை துவக்கினார்.படமும் நிர்ணயித்தபடியே விரைவில் எடுத்து முடிக்கப்பட்டது.சென்சார் மூலம் போர் காட்சிகள், அந்நிய தேச எதிர்ப்பு, தேவை இல்லாத கலாச்சார சீர்குலைவு, ஆபாச காட்சிகள் நீக்கம் போன்ற அடிப்படையில், சில காட்சிகள் இயக்கப்பட்ட படத்தில் இருந்து நீக்கும் வழக்கம் "British-America" கொண்டுவந்தது.
அந்தக் கொள்கையை பின்பற்றி  இப்படமும் சென்சார் துறைக்கு அனுப்பப்பட்டது.ஆகையால் சரியானத் தருவாயில் படம் வெளியிட முடியாமல் 1943 ஆம் ஆண்டு அகிரா வின் 33 வது வயதில் அவரது முதல் படம் வெளியாகி பெரும் வெற்றியும் அடைந்தது. இதில் குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால் சென்சார் மூலம் 18 நிமிட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது,ஆனால் இன்று அந்த 18 நிமிட காட்சிகள் நீக்கியது சினிமா வரலாற்றில் பெரிய இழப்பு என்ற செய்தியும் மக்கள் மத்தியில் உலவி வருகின்றது. 

ஓராண்டுக்கு  பின் The Most Beautiful என்ற படத்தினை இயக்க தொடங்கினார் அகிரா, இப்படத்தின் கதை போர் காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் சம்பந்தப்பட்டது. இப்படம் குறும்படம் போலவே இயக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த அனைவரையும் அந்த தொழிற்சாலைகளிலேயே தங்க வைத்து, அங்கு தயாரிக்கும் உணவு பண்டங்களையே உண்ண செய்து,கதாபத்திரங்களுக்கு படத்தில் சூட்டபட்ட பெயர்கள் வைத்தே அழைக்கவும் செய்தார் அகிரா.இதனால் கதாப்பாத்திரங்களும்  கதையோடு ஒன்றிப்போயினர்.இப்படி திரைப்படம் இயக்குவதை ஒரு தொழிலாக மட்டும் செய்யாமல்,தன் வாழ்க்கையாகவே வாழ்ந்து காட்டிய உதாரண புருஷர் அகிரா எனலாம். 
இப்படத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்ணாக கதாப்பாத்திரமேற்று நடித்த பெண்ணான Yoko Yaguchi என்னும் பெண்ணையே காதலித்து திருமணம் முடித்தார் அகிரா. அதன்பின் அவர் மனைவி வேறு படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.அகிராவின் இன்பமான திருமண வாழ்விற்கு பரிசாக Hisao என்ற மகனும் Kazuko என்ற மகளையும் ஈன்றனர். பின்னாளில்  தன் மகன் தயாரிப்பில் அகிரா சில படங்களையும் இயக்கி உள்ளார். 
பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர்,இன்றைய இளைய இயக்குனர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கிய அகிராவின் தோல்விப்படம்  என்றால் அது Sanshiro Sugata II தான்.முதலீட்டாளர்கள் அவசரப்படுத்தியதாலும் ,எதிர்கொள்ள வேண்டிய திருமண நிகழ்வாலும் படம் சரியாக இயக்கப்படாமல் தோல்வியை தழுவியது.

அசத்திக்கொண்டிருப்பார் அகிரா..
 

(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )Widget byLabStrike


No comments:

Post a Comment