Friday, July 6, 2012

அகிரா குரோசவா -உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-1)


காலம் காலமாக பின்பற்றி வந்த பாரம்பரியம்,கலாச்சாரம்,பழக்கவழக்கம் என்று குறுகிய வட்டத்தில் இருந்து சற்று விலகி பொதுக்கல்வி,அறிவியல் கண்டுபிடிப்பு என்று மாறி வரும் உலக நாடுகளில், கணினியிலும் அடுத்த பரிணாமமான ரோபோடிக்ஸ் என்னும் எந்திர படைப்புகளை  உருவாக்கி முன்னோடியாக விளங்கும் ஜப்பான் நாட்டில் பிறந்து ,உலக சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய 'Akira Kurosawa' வின்  வாழ்க்கை  வரலாறு பற்றி விரிவாக பார்க்கலாம்.

சாமுராய் என்னும் ஜப்பானிய இனக்குடும்பதை சார்ந்த Isamu என்பவருக்கும் வணிக குடும்பத்தை சார்ந்த Shima என்பவருக்கும் எட்டாவது மகனாக 23 மார்ச் மாதம் 1910 ஆம் ஆண்டு Tokyo வில் உள்ள Omori மாவட்டத்தில் பிறந்தார். அகிராவின் தந்தை அரசாங்கப் பணியில் உடற்பயிற்சி அளிக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார்,அத்தோடு நில்லாமல் சிறுவர்களுக்கு பல நாகரீக வளர்ச்சியை தெளிவாக எடுத்து கூறும் வகையில் உள்ள படங்களை திரையிட்டும்  காட்டுவார்.

இவ்வாறு அகிரா முதன் முதலில் தனது ஆறு வயதில் படம் பார்த்து ரசித்தார். இதுவே அகிராவின் படம் இயக்கும் ஆர்வத்திற்கு முன்னோடி எனலாம். இது போலவே ஓவியம் வரைவதற்கு தூண்டுதலாக இருந்தவர் Tachikawa என்னும் ஆசிரியரே ஆவார். அழகிய கை எழுத்து பயிற்சி மற்றும் Kendo எனப்படும் கத்தி சண்டை பயிற்சியும் கூடுதலாக  பயின்றார் அகிரா. 

அகிராவின் படைப்புகளுக்கு காரணியாக விளங்கிய பலரில் முக்கியமான ஒருவர் அவரது அண்ணன் Heigo kurosawa. இவர் அந்நாளில் டோக்கியோவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்கு பின்பு ,அதன் விளைவுகளை நேரில் அழைத்து சென்று அகிராவுக்கு காண்பித்தார்,இயற்கையின் கோரத்தையும் ,உண்மை நிலையையும் புரிய வைத்தார்.

அகிராவின் ஓவியம் தீட்டும் ஆர்வத்தை உணர்ந்த சிலர் அன்றே இவர் வரும் காலத்தில் ஒரு சிறந்த கலைஞன் ஆகும் வல்லமை மிக்கவன் என்று குறிப்பறிந்து கூறினர். அகிராவின் அண்ணன் Heigo தன்  பள்ளி படிப்பை தொடர முடியாமல் குடும்பத்தில் இருந்து பிரிந்து அயல் நாட்டு இலக்கியத்தை பயின்றார். பயின்று முடித்த கையோடு டோக்யோவில் உள்ள திரை அரங்குகளில் ஓடும் பேசா படத்திற்கு வசனம் வாசித்து வரும் வேலையில் தன்னை அமர்த்திக்கொண்டார். இந்த சமயத்தில்தான் அகிரா தன்னை ஒரு முழுமையான ஓவியனாக காண ஆசைக்கொண்டு அண்ணனோடு போய் சேர்ந்தார்.

திரைப்படத்தை மட்டும் சார்ந்து இல்லாமல் நாடக மேடையிலும் ,சர்க்கஸ் வித்தை காட்டும் இடங்களிலும் சிறு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்கள் அண்ணனும்,தம்பியும். அகிரா தன் ஓவியப்படைப்புகளை இடதுசாரி பாட்டாளி வர்க்க கலைஞர்கள் 'லீக் காக செய்து வந்தார்,ஆனால் அந்த நிறுவனம் எதிர்பார்த்த  ஓவியத்தை பூர்த்தி செய்ய முடியாமல் ஆர்வம் நிறைந்து போனார். 


இக்கால கட்டத்தில் பேசும் படம் வரவே வேலையிழந்த அண்ணன் Heigo மனம் வெறுத்து போய் தற்கொலை செய்து  இறந்து போனார். பல காரணங்களால் மீதம் இருந்த அண்ணன்களையும்  இழந்த அகிரா மூன்று சகோதரிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டார்.


உடன் பிறந்த அண்ணன்கள் அனைவரையும் இழந்து செய்வது அறியாது 25 வயது வாலிபனாக துடித்த அகிராவிற்கு பத்திரிகை விளம்பரம் வாயிலாக பிரகாசமான எதிர் காலம் காத்திருந்தது. P.C.L (Photo Chemical Laboratories) என்னும் நிறுவனம் உதவி இயக்குனர் தேவை என்று விளம்பரம் அறிவித்திருந்தது. சினிமாவில் முன் அனுபவம் ஏதும் இல்லாது இருந்த அகிரா நம்பிக்கையோடு கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதில் எழுதி உதவி இயக்குனர் வேலைக்கு பதிவு செய்தார். அகிரா எழுதிய பதில் ஏற்கும்படி இருக்க அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டார். Kajiro Yamamoto என்னும் இயக்குனர் தான் அங்கு தேர்வாளராக இருந்தார் அவருக்கு அகிரா வின் செயல் திறன்கள் பிடித்து போக அகிராவை உதவி இயக்குனராக தேர்ந்தெடுத்தார் Yamamoto.
      

அகிரா குரோசவா சினிமாவில்  கலக்கப் போகிறார் ...

(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


Widget byLabStrike


2 comments:

  1. எதிர்ப் பார்த்து கொண்டிருந்த பதிவு வந்து விட்டது... தொடர வாழ்த்துக்கள் சார் ! நன்றி !

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே..இன்னும் சுவாரசியமான செய்தி இருக்கின்றன..பாருங்கள்..

    ReplyDelete