Monday, March 5, 2012

பழித்தீர்த்தலின் உச்சம் (OLD BOY) | உலக சினிமாஇருக்கிற தண்டனையிலேயே கொடுமையான,கடுமையான தண்டனை எதுவென்று என்னிடம் கேட்டால் நான் கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் அது தனிமைச்சிறைதான்.நான் மட்டுமல்ல எல்லோரும் இதைதான் ஆமோதிப்பார்கள்.தனிமைச்சிறையில் தாங்கள் அனுபவித்தக் கொடுமையை சிலர் எழுதியதன் வாயிலாகவும்,ஏன்,நெல்சன் மண்டேலா என்ற தன்னிகரில்லாத் தலைவன் தன் மக்களுக்காக தனிமைச்சிறையில் பட்ட வேதனையின் வாயிலாகவும் உலகம் முழுக்க அறியும் தனிமைச் சிறையின் உக்கிரத்தை.

ஒருவனை அடித்து,துன்புறுத்துவதை விடவும் அவனை தனிமையில் அடைத்து இம்சிப்பது கொடுமையானது..

அப்படித்தான் ஏதோ ஒரு காரணத்துக்காக தனிமையான ஒரு அறையில் சிறைவைக்கப்படுகிறான் கதாநாயகன்.ஆனால் இவன் நாட்டுக்கு பாடுபட்டவன் இல்லை.ஏதோ ஒரு தவறுக்காகவும்,அதற்காக பழிவாங்கும் நோக்கத்திலும் மட்டுமே அடைக்கப்பட்டிருப்பவன் என்பது காட்சிகளில் புரிகிறது.அவன் உண்ண உணவு மட்டும் அவ்வபோது கதவிடுக்கின் கீழ் வழியாக உள்ளே தள்ளப்படுகிறது.

கதாநாயகன் தனிமையில் அனுபவிக்கும் வேதனை,அவன் படும் மன உளைச்சல்,தனிமையின் கொடுமை தாளாமல் தன்னை தானே அழித்து தற்கொலை செய்து கொள்ள முயலும் வேளைகளில் மயக்க மருந்து கலந்த புகை உள்ளே அனுப்பப்பட்டு அவனை மயக்கமுற செய்கிறார்கள்.இப்படியாய் பதினைந்து ஆண்டுகளை தனிமையில் அனுபவித்து முடிக்கிறான் கதாநாயகன்.இந்த சிறை நாள்களில் தனக்கு எதிரிகள் யார்,யாரால் எதற்காக இந்த கொடுமைக்கு ஆளாகி இருப்போம் என தன் மனதிற்குள் ஒரு கணக்கையும் எண்ணி அதை எழுதியும் வைத்துக் கொள்கிறான். பின் ஒருநாள் விடுதலை செய்யப்படுகிறான்.

விடுதலையாகி வெளிவந்த நிலையில்தான் அந்த ரெஸ்டாரெண்டுக்கு போக,அங்கே ஒரு பருவப்பெண் வேலை செய்துகொண்டு இருக்கிறாள்..அவளோடு நட்பாகி,காதலாகி,அவளோடு அறையில் ஒன்றாய் தங்கி பின் அவளோடு செக்ஸ் வைத்துக்கொள்கிற அளவுக்கு நெருக்கமாகி போகிறான்.இந்நிலையில் தன் பல வருட சிறை வாழ்க்கைக்கான காரணத்தையும்,தான் இழந்த தன் மகள்,குடும்பத்தையும், அவளின் உதவியோடு தேடி அலைகிறான் .

தன்னை பழி வாங்கியவனை கண்டு பிடித்து கதாநாயகன் நெருங்கி அவனை கொலை செய்ய முயலும் வேளையில்,வில்லனால் ஒரு கெடு வைக்கப்படுகிறது.

"என்னை நீ கொன்றுவிட்டால் பதினைந்து வருடம் சிறைவாசம் அனுபவித்ததற்கான காரணம் தெரியாமல் நீ போவாய்,ஐந்துநாள் அவகாசம் கொடுக்கிறேன் அறிந்து வா அதற்கான காரணம் என்னவென்று" இந்நிலையில்தான் பல மர்ம முடிச்சுகள் கட்டவிழ்கிறது கதையில்..கதாநாயகன் தான் செய்த காரியத்துக்காக துடிக்கிறான்..அழுகிறான்..கதறுகிறான்..நாயாக தன்னை எண்ணிக்கொண்டு வில்லனிடத்தில் வாலாட்டுகிறான்..இறுதியில் தன் நாவினை கத்தரி கொண்டு கத்தரித்து ஊமையாகிறான்..ஊமையாகி ஒரு உண்மையையும் ,உறவையும் காப்பாற்றுகிறான்.

ஆமாம் ,அப்படி அவன் நடந்து கொள்கிற அளவுக்கு "குற்றம் நடந்தது என்ன" என்று கேட்கிறீர்களா..படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்.இதைவிட பெரிய தண்டனையை யாராலும் தர இயலாது என்பதை நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

பிசகாத திரைக்கதை,காட்சிகள்,நடிப்பு,ஒளிப்பதிவு,இயக்கம்,இசை என எல்லாத்துறையிலும் மிரட்டி இருக்கிறார்கள்..முக்கியமாக கதைக்களத்தில்..பல சர்வதேச விருதுகளை வென்ற கொரியப்படம்..கண்டிப்பாய் பாருங்கள்!


Widget byLabStrike


No comments:

Post a Comment