Friday, March 16, 2012

சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-6)நீல நிற விழிகளில் வசீகரம் கொண்ட கண்கள் சாப்ளினுடையது.அந்த வசீகரனுக்கு சொந்தமானதுதான் பின்னாளில் ஹிட்லர் மீசை என அறியப்படுகிற அந்த கட்டை மீசையும்.சாப்ளின் தன் தன்னிகரில்லாத் திறமையாலும்,அதற்கேற்ற கெட்டப்பாலும் உலகத்தை தன் பக்கம் கட்டிப் போடவே,ஹிட்லரும் தன் பார்வையை அவர் பக்கம் திருப்பினார்.அந்த கவர்ச்சியான மீசையில் கட்டுண்டார், கட்டை மீசை வைத்துக்கொண்டார்.அது அப்புறம் ஹிட்லர் மீசை ஆகிப்போனது.

சிந்தனைகளால் வேறுபட்டு மீசையால் ஒன்றுப்பட்ட சாப்ளினுக்கும்,ஹிட்லருக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு.இருவரும் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள்.சாப்ளின்,ஹிட்லரை விட நான்கு நாட்கள் பெரியவர்.ஹிட்லரின் சாம்ராஜ்யம் அழிக்கப்பட்டு,இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது, ரஷ்யாவில் ஸ்டாலின் அபரிமிதமாக வளரத்தொடங்கி இருந்தார்.ரஷ்யாவின் அருகாமை நாடுகளிலும் கம்யூனிசத்தின் கை ஓங்கவே அமெரிக்கா சற்று மிரண்டுப் போனது.

உடனடியாக ஹாலிவுட் வட்டாரத்தில் இருக்கும் கம்யூனிச ஆதரவாளர்களை அது பட்டியலிட்டது.அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் சாப்ளின்.உடனடியாக கைவைக்க இயலாத உயரத்தில் இருந்த சாப்ளினை,சறுக்கித் தள்ள காலம் கணித்து காத்திருந்தது அமெரிக்கா.நெடுநாட்களாக அமெரிக்க குடியுரிமை பெறாமல் கல்தா கொடுத்த வந்த சாப்ளினை அமெரிக்காவின் இருப்புக் கரம் நசுக்க நாள் குறித்தது.1952 ஆம் ஆண்டு லைம் லைட்"" பட வெளியீட்டிற்கு லண்டன் சென்று திரும்பிய சாப்ளினை கப்பலில் வழிமறித்த தந்தி "நீங்கள் நாடு கடத்தப் பட்டுள்ளீர்கள்,உங்கள் சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,மீறி அமெரிக்காவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்" என்று சொல்லி சென்றது.

தம்மை வஞ்சித்த அமெரிக்காவை விட்டு தம் மனைவி மற்றும் எட்டுக் குழந்தைகளுடன் இடம் பெயர்ந்தார் சுவிட்சர்லாந்துக்கு.மேலும் இரண்டு படங்கள் இயக்கினார்..முதுமை அவரை சுருக்கவே ,அவரும் ஒதுங்கினார் சினிமாவை விட்டு..

1972 அமெரிக்கா தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேட பிரயாசைக் கொண்டது.அந்த ஆண்டு ஆஸ்கர் அரங்கில் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்து சாப்ளினை வரவேற்று தாம் பெருமைக் கொள்வதாய் பீற்றிக் கொண்டது.கூட்டம் குதூகலித்து எழுந்து நின்று கைத்தட்டி ஆராவாரம் செய்து அவரை வரவேற்க எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த 82 வயது முதியவர் மேடை ஏறினார்.உலக அரங்கில் சினிமாவை உயர்த்தியவனின் உன்னதம் அன்று உலகுக்கு விளங்கிற்று.

25 டிசம்பர் 1977 இல் ஓர் கிருஸ்துமஸ் இரவில் ,அந்த உலகமகா கலைஞன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தான் .தம் நகைச்சுவையால் பலரின் மனதைக் கொள்ளையடித்தவன் உடலை யாரோ கொள்ளையடித்து விட்டார்கள்.பின்னர் பதினொரு நாட்கள் கழித்து அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.ஆனால் அந்த உலகக் கலைஞனின்  நினைவுகள் என்றும் அடங்காமல் நம் நெஞ்சில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது..

சரித்திரத்தில் சாகாவரம் பெற்றார் சாப்ளின்..


முந்தைய பதிவைப் படிக்க..


சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-5)


----------------------------------------------------------------------------------------------------------------------------------------


அடுத்தவாரம் உங்களை சந்திக்கப் இருப்பவர்  உலக சினிமாவின் இலக்கணமாக கருதப்பட்ட D. W. கிரிப்பித்..காத்திருங்கள்..

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Widget byLabStrike


1 comment: