Friday, March 9, 2012

சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-5)

1917 மியூசுவல் நிறுவனத்துடன் சாப்ளின் செய்திருந்த ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்திருந்தது.சாப்ளின் கூட்டிலிருந்து விடுபட்டு, சிறகு முளைத்த பறவையாக சிந்திக்க ஆரம்பித்தார்.இனி தன்னுடைய கற்பனைக்கு யாரும் தடை போட இயலாது,தாமே கதை அமைத்து ,தயாரிப்பதன் மூலம் சுதந்திரமாக செயல்படலாம், சமுதாயத்துக்கு தேவையானதை,தாம் எண்ணியதை சொல்லலாம் என எண்ணம் கொண்டார்.

அதன் விளைவாக La brea avenue என்ற இடத்தில் சாப்ளினின் சொந்த ஸ்டூடியோ உதயமானது.தனது படைப்புகளுக்காக First National Exhibitor உடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.அவர்கள் தயாரித்த முதல் படம் "A Dogs Life " இப்படம் தயாரிக்கும் நேரத்தில் முதல் உலகப்போர் மூண்டதால் அவசர அவசரமாக படம் வெளியானது.போர் முடிவுற்ற நிலையில் "shouders arm " என்று போரினை மையமாக வைத்து படமெடுக்க முடிவெடுத்தார்.இதனால் சாப்ளின் நண்பர்கள் அவர் வம்பில் மாட்டிக் கொள்வாரோ என்று எண்ணி அஞ்சினர்.பின்பு வந்தப் படம்தான் "The Kid "தனக்கு பிறந்த குழந்தையின் மரணத்தை தாங்க இயலாத சாப்ளின் அக்குழந்தையின் நினைவை மனதில் நிறுத்தி ஒரு சிறுவனை வைத்து கற்பனையாக எடுத்தப் படம்.உலகம் முழுவதையும் கண்ணீரால் நனைத்த காவியம்.மக்களின் ரசனை நகைச்சுவைப் படங்களிலிருந்து மாறி கதையின் ஆழம் கண்ட காலம் அது. உலகமே இனி சாப்ளின் என்ன செய்யப் போகிறார் என்கிற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருந்தது.அப்போதுதான் அந்தப் படம் வெளியானது "The women of paris " என்ன செய்வார் என்று எண்ணியவர்களை,எப்படி செய்தார் என்று ஆச்சர்யப் படுத்திய காதல் காவியம்.காதலின் ஆழத்தை,அதன் அடியாளம் வரை சென்று உணர்வுகளால் உயர்த்தி நிறுத்திய உன்னத படைப்பு.தொடர்ந்து வந்த "The gold rush " ம் பெருவாரியான வெற்றியை தொடரவே சாப்ளினை தூற்றியோர் வாயடைத்துப் போயினர்."The circus "படம் அந்த வருடத்திற்கான ஆஸ்கரைப் பெரும் என பெரும்பாலானோர் எதிர்ப்பார்த்திருந்தனர்.ஆனால் காலம் செய்தது வேறு. கதை,வசனம்,நடிப்பு போன்றவற்றிக்கான சிறப்பு பரிசை சாப்ளினுக்கு கொடுத்து அது ஒதுங்கிக்கொண்டது.சாப்ளின் அமெரிக்கர் அல்ல என்பதும்,அவர் வளர்ச்சியின் மீது ஹாலிவுட் பட அதிபர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியும் கூட , அதன் உள்நோக்கமாக இருக்கலாம் என சாப்ளின் உள்ளிட்டோர் எண்ணி இருக்ககூடும்.

அதற்கேற்றார் போல் அமெரிக்க பத்திரிக்கைகளும் உலக நகைச்சுவை மன்னனை, "பேசும் சினிமா வந்துவிட்டது,பேசா காமெடியன் இனி வீட்டுக்கு போய் கதவை சாத்திக்கொள்ள வேண்டியதுதான்" என நகைத்தும்,இழித்தும் பேசலாயின.

அப்போதுதான் அந்தக் கலைஞன் உரக்க கத்திப் பேசினான்.."நான் கதவடைக்கப் போவதில்லை.."மொழி என்பது மனிதனை பிரித்தது,மௌனம் என்பது மனிதனை இணைத்தது" என் வெற்றி கண்டு, என்னை ஏளனமாய் பேசுபவர்கள்தான் கதவடைத்துக் கொள்ளப் போகிறீர்கள்"என்று.

அந்தக் கலைஞன் தான் வளர்ந்து,உயர்ந்து விட்டவனாக அப்போ எண்ணவில்லை. இப்போ எடுக்க போகும் சினிமாதான் தனக்கான முதல் சினிமாவாய் ,தன் தன்மானத்தை காத்து தன்னை தலை நிமிர வைக்கும் படைப்பு என நெஞ்சம் முழுக்க நினைவில் கொண்டான்.ஆம்.. அந்தக் கலைஞன் ,அன்று விதையாய் உள்ளே போட்டது ,ஆலமரமாய் வளர்ந்து நின்றது "City lights "என்ற திரை சரித்திரமாய்.இப்படம் முடிக்க கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் சாப்ளின்.ஊன்,உடல்,உயிரென கொடுத்து எடுத்தார் படத்தை.

படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்து புறக்கணித்தனர்.திரையரங்கு முதலாளிகளும் தியேட்டர் தராமல் இழுத்தடித்தனர்.ஆனால் ஊரிலேயே ஒரு பெரிய திரையரங்கு 1500 பேருக்கு மேல் அமரும் இடவசதி கொண்டது,அவர்கள் மட்டும் படத்தை திரையிட முன்வந்தார்கள்.அதுநாள்வரை அந்த திரையரங்கு முழுவதுமாய் நிரம்பியது இல்லை "City lights " ஹவுஸ் புல்லாகி வரலாறு கண்டது.சதி செய்த எதிரிகள் கதி கலங்கிப் போனார்கள்.

மாபெரும் அறிவியல் மேதை ஐன்ஸ்டீனுடன் சாப்ளின் அமைதியாய் ஆனந்தக் கண்ணீர் செறிய படத்தின் வெற்றியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.அடுத்தப் படைப்பாக அரங்கேறியது "Modern times " உலகத்தின் அன்றைய நிலையை, மனித மனம் இயந்திரமாகி,இரக்கப் பண்புகளை இழந்து கொடுமையான சூழலுக்கு தள்ளப் படுவதை அப்படியே பிரதிபலித்தப் படம்.அமெரிக்கர்களை வெறுப்பாக்கிய படம்.சாப்ளின் கம்யூனிஸ்ட் ஆதரவாளரோ என்று சர்ச்சையை உண்டு செய்தப் படம்.

அந்தக் காலக்கட்டங்களில் உலகமே ஒருவனைக் கண்டு அஞ்சி நடுங்கி பயத்தில் பதுங்கி மௌனத்தில் இருந்தது.பேசும் மொழி படம் வந்ததே தவிர யாரும் அவனைப் பார்த்து எதிர்த்துப் பேசும் தைரியத்தில் இல்லை.ஆனால் இதுவரை மௌனத்தில் இருந்த ஒருவர் மட்டும் தம் விரதம் கலைத்தார்..அவனை எதிர்த்து பேசத் துணிந்தார்..ஹிட்லரை கிண்டலடித்து பேசினார் "The great dictator "படத்தில்..ஹிட்லர் படம் பார்த்து அரண்டான்.மூன்று நாட்கள் திரும்ப திரும்ப படத்தைப் பார்த்து அதிர்ந்தான்.கோபத்தில் சிவந்தான்.முதல்முறை படம் பார்த்து சாப்ளினை பிடித்து தன் காலடியில் போட்டு மிதிக்க வேண்டுமென்றவன்,மறுமுறை பார்த்தபோது சாப்ளின் தைரியம் கண்டு வியந்தான்,பாராட்டினான்.

அந்தப் படத்தில்தான் சாப்ளின் முதல் முறையாய் பேசினார்..ஆனால் வரலாற்றில் இன்றுவரை அந்தப் படம் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

சாப்ளின் இன்னும் பேசுவார்..


(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


முந்தைய பதிவைப் படிக்க..

சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-4)Widget byLabStrike


2 comments:

  1. நீங்க சாப்ளின் பத்தி போடா ஆரம்பிச்ச நேரம் எல்லா தொலைகாட்சிகளிலும் சாப்ளின் படம் தான் கலக்குங்க!!!!!!!!!!!!!!
    http://madhimugathal.blogspot.in

    ReplyDelete