Friday, February 10, 2012

சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள்!

உலகசினிமா என்பது ஆங்கில மொழியல்லாத,வேற்றுமொழியில் தரம் மிக்க படங்கள் என்றும்,வியாபாரத்தை முன்னிறுத்தாமல் தரத்தை முன்னிறுத்தும் படங்களாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.

மனிதன் மொழியால் வேறுபட்டாலும்,உணர்வால் ஒன்றிப்போகும்படி படம் செய்வது,அப்படி செய்யப்படுகிற அனைத்துப்படங்களும் உலக சினிமாவாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது.

ஆனால் இந்த பகுதி ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி சினிமா செய்தவர்களை மட்டும் பேசப்போவதில்லை,ஆங்கில மொழி சினிமாவாகட்டும் இல்லை அயல் மொழி சினிமாவாகட்டும் அது நகைச்சுவை,த்ரில்லர்,ஆக்சன்,அனிமேஷன்,வரலாறு என எதுவாக இருப்பினும் தரம் உயர்ந்த சினிமா செய்தவர்கள் யாராக,எந்த மொழியினராக இருந்தாலும் அவர்களைப் பற்றி பேசப்போகிறது.

1800 ஆண்டின் இறுதி நாட்களில் தோன்றிய சினிமா பல்வேறு ஆராச்சிகளுக்கு மத்தியில் பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி மௌன மொழி சினிமாவிலிருந்து பின் பேசும் சினிமாவாகி,இன்று டிஜிட்டல் சினிமாவரை வெவ்வேறு வடிவங்களை கடந்து வந்துள்ளது.இதன் வளச்சியில் பலரும் பல்வேறு ரீதியாக இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,நடிகர் எனவும் இன்னும் ஏனையத் துறைகளிலும் சினிமாவின் வளர்ச்சிக்கு அரும் பாடுப் பட்டிருக்கிறார்கள்,நல்ல சினிமா எடுக்கும் நோக்கில் பயணப்பட்டிருக்கிறார்கள்.அப்படி சினிமாவின் உயரத்தை மேலும் மேலும் உயர்த்திப் பிடித்த அந்த தலையாய மனிதர்கள்தான் இந்த தொடரில் நம்மோடு பயணிக்கப்போகிறார்கள்.

வாருங்கள்..முதல் இடுகையாக மௌன மொழி சினிமாவின் ஒப்பற்ற அடையாளம் உலகின் தலையாய கலைஞன் சாப்ளினோடு நம் பயணத்தை தொடர்வோம்...

உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் - சாப்ளின்

லண்டன் மாநகரம் வறுமை ஒருபக்கமும்,செழுமை மறுபக்கமுமாய் வலம் வந்த காலமது..1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 இருட்டிய முன்னிரவில் ஹென்னவின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை இந்த பூமியை எட்டிப்பார்த்து,வீ...என்று வீரிட்டு அழுது இருட்டின் அமைதியை கிழித்துப் பிறந்தது.அன்று கத்திப்பிறந்தவன்தான் வரும் காலத்தில் தன் மௌன மொழியால் இந்த அகிலத்தை கட்டியாளப்போகிறவன் என்று யாரும் அத்தருணத்தில் எண்ணி இருக்க வாய்ப்பில்லை.எல்லோரும் போலவே அவனும் சாதாரணமாய் இருந்தான் இயற்பெயரில் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் என்றும் பின்னாளில் சார்லி சாப்ளின் என்றும் எல்லோர் மனதையும் கொள்ளையடிதிருந்தான்.

சாப்ளின் பிறந்த ஓராண்டிலேயே தாய் ஹென்னாவை விட்டு தகப்பன் சார்லஸ் பிரிந்தான்.இயல்பில் மது விடுதி பாடகியான ஹென்னா சாப்ளின் அவள் வயிற்றில் கருவுற்றிருந்ததாலும்,பின் குழந்தை சாப்ளினை பாராமரிக்கும் பொறுப்பினாலும் பாடுவதை சிலகாலம் நிறுத்தி இருந்தாள் ,மேலும் இரண்டு குழந்தை பெற்ற சோர்வு மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக அவள் வசீகரமும்,குரலும் கூட வாடி போயிருந்தது.ஆனால் கணவன் சார்லஸ் பிரிந்ததால் வறுமை மட்டும் அவர்களின் வாழ்வில் பசுமையாய் குடிகொண்டது.முதல் கணவனிடம் பெற்ற சிட்னியையும்,இரண்டாம் கணவனிடம் வரம்பெற்ற சாப்ளினையும் இன்பசுமை சுமந்தவளுக்கு வறுமை என்கிற துன்பசுமை துயரத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.அருகிலிருந்த தேவாலய பணி ஆட்களுக்கு அழுக்கு துணி துவைத்து காய வைத்து கிடைத்த சொற்ப வருமானத்தில் குழந்தைகளின் வயிறை காயவிடாமல் ஈரமாக்கினாளே தவிர அவர்கள் வயிற்றை முழுதாய் நிரப்பும் அளவுக்கு அந்த வருமானம் அவளுக்கு போதுமானதாய் இல்லை..இந்நிலையில்தான் ஹென்னா மது விடுதிகளை நோக்கி மீண்டும் மீண்டும் ஓடினாள்..நான் நன்றாய் பாடுவேன் என்று விடுதி சொந்தக்காரர்களிடம் மன்றாடினாள்..யாரும் மசிவதாய் இல்லை.ஆனால் ஒருவன் மட்டும் தலை அசைத்திருந்தான்.பாட வாய்ப்பு கிடைத்த சந்தோசத்தில் மேடை ஏறியவளுக்கு ஏனோ வார்த்தை வரவில்லை,துக்கம் தொண்டை அடைக்க நாவறன்டாள்,குரல் வரவில்லை குமுறினாள்,ஆட வரவில்லை அழுதாள், ஊமையானாள் உளறினாள்,கண்கள் மட்டும் அவளிடத்தில் கருணைக்கொண்டு கண்ணீராய் கரைந்து பேசியது..அவள் பாடலை எதிர்பார்த்து ஏமாந்த குடிகாரர்களிடம் கூச்சலும்,குரைத்தல்களும் அதிகமாயின.குடிகாரர்கள் தான் கையில் வைத்திருந்த பொருட்களை அவள் மீது வீசி தாக்கினர்..அவளைத் தாக்கிய வறுமையை விடவும் இந்த தாக்குதல் அதிகமாய் வலித்தது அவளுக்கு.அத்தருணத்தில் என்ன செய்வதென்று அறியாதவளாய் ஏதும் புரியாதவளாய் மேடையை விட்டு இறங்கி ஓடினாள் ஹென்னா..மேடையோரம் ஒதுங்கி தன் தாயின் நிலைக்கண்ட ஆறு வயது சாப்ளின் என்ன நினைத்தானோ தெரியவில்லை,திடீரென காட்டாற்று வெள்ளமாய் மேடையில் பாய்ந்தான்.தான் தாய் சொல்லித்தந்த பாடலொன்றை பட்டென பாடினான்,கை,கால் ஆட்டி அழகாய் நடனம் ஆடினான்.சிறுவன் ஆட்டம் கண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது,சில்லறைகளை அள்ளி மேடையில் தெளித்து சிலாகித்தது.பாடுவதை நிறுத்தி சில்லறை பொறுக்கும் சிறுவனை பாட சொல்லி வேண்டியது.."ஒவ்வொரு வேலையாக தான் செய்ய முடியும்,இரு வேலையை ஒன்றாய் செய்ய இயலாது,சில்லறை பொறுக்குகிறேன் முதலில்,அப்புறம் உங்கள் சிந்தையை மகிழ்விக்கிறேன்" என்று பதிலுரைத்த சிறுவனின் அறிவு கண்டு அரங்கம் அதிர்ந்தது,சிரிப்பொலிகளால் நிறைந்தது.பாட இயலாமல் மேடைவிட்டு ஓடிய ஹென்னா ஓடி வந்து அணைத்தாள்,ஆனந்தக்கண்ணீரால் நனைத்தாள் தன் மகனை.முதல் மேடையிலேயே மிளிர்ந்தான்,நல்ல நடிகனாய் ஒளிர்ந்தான் அன்னையைக் காத்த அந்த அன்பு மகன்!
சாப்ளின் வளர்வான்...

(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கொசுறு : joseph nicephore nipce -: 1825 ஆம் ஆண்டு இவர் எடுத்த புகைப்படமே முதல் உண்மைப்புகைப்படம் என்றும்  இவரே முதல் புகைப்படக் கலைஞர் என்கிற பெருமையையையும் பெற்றவராவார் .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------


Widget byLabStrike


No comments:

Post a Comment