Monday, February 6, 2012

மெரினா-வணக்கம் வாழ வைக்கும் சென்னை!



மெரினா-கேட்கிற போதே மெய் சிலிர்க்க வைக்கிற பெயர்,பார்க்க தூண்டுகிற பரவசத்தையும்,கற்பனையில் கடலையும் கடல் சார்ந்த மனிதர்களையும் கண் முன் நிறுத்துகிற வங்கக்கடலின் வசீகரம்..சென்னைவாசிகளின் சொர்க்கம்,வெளியூர் வாசிகளின் வியப்பு,கடற்கரைவாசிகளின் பிழைப்பு!

சென்னையில் காதலித்தவனும்,கவிபாட முனைந்தவனும் ஒருமுறையேனும் மெரீனா கடற்கரையில் காலாடி இருக்கவேண்டுமென்று விதி!மெரீனா காதலர்களின் தாய்நாடு எழுத்தாளர்களின் காவிய பூமி என்பது காலம் இட்ட கட்டளை!

மெரினாவின் பரந்துவிரிந்த மனதை போல்தான்,பரந்துப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை மெரீனா மணல்பரப்பு முழுக்க..இப்படி பலதரப்பட்ட மனித வாழ்க்கையை மையமாய் கொண்டு உருவாயிருக்கிறது மெரீனா திரைப்படம்..அமரர் ஊர்தி வரும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம்.ஊரை விட்டு ஓடிவருகிறவனை ,வாழ வழியற்று வருகிறவர்களை தன் அகன்ற கரம் கொண்டு அணைத்து மெரீனா தரும் அடைக்கலமும்,அன்பும் அனைத்துக்காட்சிகளிலும் நிரம்பி இருக்கிறது.கதை என்று ஒரு மனிதனை சுற்றாமல் வாழ்க்கை சம்பவங்களை சுற்றி படம் நகருகிறது.அனாதையாய் வந்து வாழ வழி தேடுகிறவன்,பிள்ளையால் நிர்கதியாகப்பட்டு பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட பெரியவர்,இசைக்கலைஞனாக ஆசைப்பட்டு பசிக்கலைஞனாக சுற்றும் தந்தை மகள்,சுண்டல் விற்கும் சிறுவர்கள் அவர்களின் பின்னால் சூழ்ந்து நிற்கும் சோகம்,மனப்பிறழ்வு அடைந்த அன்புசெல்வன் ஐ.பி.எஸ் அவரை சுற்றும் சுவாரசியம்,கடற்கரையில் காதலியை தள்ளிவந்து கண்டமாகிற இளைஞன் ,உறவாய் வந்து ஊடுவுகிற தபால்காரன் ,அவர்களுக்குள் உள்ள உறவு என எல்லாத்தரப்பையும் ஏற்றி,சிறார் கல்வி என்ற சமூகப் பொறுப்பையும் தாங்கி பயணிக்கிறது படம்..

அனைவரின் உழைப்பும் அற்புதம்,படம் இடையில் கொஞ்சம் தொய்வடைந்தாலும்,தொங்கி விடாமல் வேகமெடுக்கிறது..முக்கியமாய் ஒளிப்பதிவாளரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்,ஒவ்வொரு காட்சியும்,கண் கொட்டாமல் பார்க்கும்படி ,கண்மூடித்தனமாய் உழைத்திருக்கிறார்..வசனங்கள் அற்புதம்,பாண்டிராஜ் மீண்டும் ஒருமுறை தன்னை ஒரு நல்ல இயக்குனராய் நிலை நிறுத்தி இருக்கிறார்!நல்லபடம்..பார்க்க வேண்டிய படமும் கூட..

வணக்கம் வாழ வைக்கும் சென்னை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் சேர்ந்து இப்படத்தை வெற்றிமுகமாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!


Widget byLabStrike


No comments:

Post a Comment