Monday, February 27, 2012

ஆஸ்காரை அள்ளிய "The Artist "அனுபவிப்பின் அவசியம்!புகழின் உச்சத்தில் வலம் வரும் மௌன மொழி சினிமாவின் உச்ச நட்சத்திரம் அவர்.திரையரங்கில் தான் நடித்து வெளிவந்த படத்தின் வெற்றியைக் கண்டுகளித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து,பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் வேளையில்,பார்வையாளர்களில் ஒருவளாக நின்றிருந்த ஒரு பெண் தன் பர்ஸ் கீழே விழுந்ததில் அதை எடுக்கப்போய் எதேச்சையாக நடிகரை இடித்து விட பார்வையாளர் மற்றும் பத்திரிக்கையாளர் கூட்டம் பதட்டமடைகிறது..நடிகன் அவளை நோக்குகிறார்..அவளின் முகத்தில் இடித்ததற்கான குற்ற உணர்ச்சி..பாவப்பட்டவளாய் அவள் நடிகரை நோக்குகிறாள்..நடிகன் புன்னைகைக்கிறார் ..அவளும் சிரிக்கிறாள்..கூட்டம் ஆர்ப்பரிக்கிறது..அந்த நடிகனின் இயல்பும் ,எதார்த்தமும் அந்த காட்சியிலேயே பார்வையாளர்களை சென்றடைகிறது. குதூகலத்தில் உச்ச நடிகனின் கன்னத்தில் அப்பெண் நச்சென்று இச்சொன்று வைக்க..மறுநாள் பத்திரிக்கையில் புகைப்படத்துடன் தலைப்பு செய்தியாய் தலைக்காட்டுகிறது அந்த செய்தி.

who 's that girl

வீட்டில் அந்த செய்தியை படித்து வெறுப்பில் இருக்கும் மனைவியை சந்தோசப்படுத்த நடிகன் மேற்கொள்ளும் மௌன மொழி சோக முக அசைவு மற்றும் மற்ற காட்சியில் தன் மனைவிக்காய் வாங்கி வர சொல்லும் வைர நெக்லஸ் என அவர் ஒரு நல்ல குடும்பத்தலைவனாக தென்படுகிறார்.

இப்படியாக நல்ல குணமும்,நகைச்சுவை இயல்பும் உள்ள மௌன மொழி சினிமாவின் உயர்ந்த நடிகன் பேசும் மொழி சினிமா வந்தும் கூட அதை ஏற்றுக்கொள்ளாமல் மௌன மொழி சினிமாவை மிகவும் நேசிக்கிறார்.உண்மையான மொழியை மௌனமே வெளிப்படுத்த முடியும் என்று பேசும் சினிமாவைப் பார்த்து சிரிக்கிறார்.ஆனால் அக்காலத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப மௌன சினிமா புறந்தள்ளப்பட்டு டாக்கிஸ் எனப்படுகிற பேசும் சினிமா முன்னுக்கு வருகிறது.

நடிகன் தன் வறட்டு பிடிவாதத்தாலும்,மௌன மொழி சினிமாவின்பால் கொண்ட காதலாலும் தன் சொந்த பணத்தை செலவு செய்து மௌன மொழி சினிமா தயாரிக்கிறார்..அவர் எடுத்த படங்கள் தோல்வியை தழுவ,மனைவி நாயகனை விட்டு பிரிகிறார்,இதனால் ராஜா மாதிரி வாழ்ந்தவர், வறுமையான சூழலுக்கு தள்ளப்பட்டு ,கடுமையான குடிப் பழக்கத்துக்கு ஆளாகி வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று குடிக்கிற அளவு கொடுமையான நிலைக்கு ஆளாகிறார். கடுமையான மன உளைச்சலில் சுற்றுகிறார்..

இதற்கிடையில் who 's that girl என அறியப்பட்ட அப்பெண் சிறு சிறு வாய்ப்புகளால் சினிமாவில் முன்னேறி பெரிய நடிகையாக பேசும் சினிமாவில் பேசப்படுபவராக வளர்ந்து உயர்ந்து நிற்கிறார்.

மௌன மொழி நாயகன் மீது அவளுக்கு ஒரு மென்மையான காதல் அங்கே அரும்பி வருகிறது.

இருவருக்குமிடையிலான காதல் என்னாகிறது,நாயகன் திரும்ப சினிமாவில் வந்து ஜெயித்தாரா என்பதே கதை!

கருப்பு வெள்ளையில்,மௌன மொழி சினிமாவில் உள்ள மாண்பு நெறி மாறாமல் படமெடுத்து அன்றைய காலக்கட்டதுக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்கள்..ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நடித்திருக்கிறது என்பதை விட அந்த காலக்கட்டத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப வாழ்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.பேசும் மொழிப் படங்களே இன்றைய சூழலில் தொங்கி தூக்கம் வரவைக்கிற நிலையில்,மௌன மொழியில் பிசகாத திரைக்கதை இயக்கம் என எங்கும் சோர்வடைய விடாமல் சுவாரசியமாய் நகர்த்தி இருப்பது இயக்குனரின் சாமார்த்தியம்.

படத்தில் நடித்திருக்கும் நாய்க்கு தனியாய் தரவேண்டும் award..அவ்வளவு சிறப்பாய் நடித்திருக்கிறது..மௌன மொழியின் அடையாளமாய் அந்த நாயினை பயன்படுத்தி நாயகன் பேசும் மொழி சினிமாவுக்கு தன்னை மாற்றிக் கொண்டு விட்டார் என்றதும் நாய் காட்சிகளில் இல்லாமல் செய்திருப்பது நன்று..நல்ல உவமை!

நடனமாடிவிட்டு நடிகை நடிகரின் அறைக்கு வந்து அவர் ஸ்பரிசம் பட்ட மேலங்கியை முகர்ந்து ,கட்டியணைத்து,தன் கைவிட்டு நடிகனே தன்னை அணைப்பது போல ஒரு உணர்ச்சியைக் காட்டுவாரே..அப்பப்பா..ஆஸ்காரை எண்ணி கொடுக்க வேண்டியதில்லை அள்ளிக் கொடுக்கலாம் அந்த காட்சிக்கு..

நடிகன் வாழ்க்கை வெறுத்துப்போய் துப்பாக்கியை தன் வாயில் வைத்தபடி உட்க்கார்ந்திருக்கும் வேளையில்"BANG " எனப் போடப்படும் கார்டு..அடுத்தக்காட்சியில் நடிகரை தேடி வந்த நடிகை கார் மரத்தில் மோதி இருப்பது என சீரியசான நேரத்திலும் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்,மகிழ்ச்சியையும்,நிம்மதி பெருமூச்சையும் நிறைத்து செல்கிறது..திரையரங்கு முழுக்க மகிழ்ச்சி அலைகள்..

எழுத்தைக் காட்டிலும் எப்படி ஓவியம் உலகமெலாம் உணரப்படும் உயர்ந்த , உன்னத மொழியாகிறதோ அதுபோல மொழிகளைக் கடந்து உலக மொழியான உணர்ச்சியை மையப்படுத்தி எடுக்கப் பட்ட மௌன மொழியின் ஆளுமை படமெங்கும் விரவிக் கிடக்கிறது..மௌன மொழி சினிமாக்கள் மீண்டும் வரவேண்டும் எனும் ஏக்கத்தையும்,தாக்கத்தையும் உருவாக்கி உலக சினிமா வரலாற்றில் உயர்ந்து நிற்கிறது ""தி ஆர்டிஸ்ட்""

 தி ஆர்டிஸ்ட் அள்ளிய விருதுகள்:

Best Picture

Directing

Actor In a Leading Role

Music (Original Score)

Costume Design

Widget byLabStrike


2 comments: