Friday, February 24, 2012

சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-3 )சாப்ளின் தகப்பனின் இழப்பு மீண்டும் ஹென்னா குடும்பத்திற்கு வறுமை அழைப்பாகி இருந்தது.ஹென்னா திரும்பவும் மனப்பிறழ்வு அடைந்திருந்தாள்.தாங்க இயலா வறுமை ஒருபக்கம்,குடும்ப வேதனை மறுப்பக்கம் என சிட்னி,சாப்ளினை இரண்டும் சேர்ந்து இறுக்க ,கூலி வேலைகளுக்கு இருவரும் ஓடலாயினர்.வேலை போக கிடைக்கிற இடைவெளியில் நடிக்க வாய்ப்பு கேட்டு நாடக கொட்டகைகளை துரத்துகிறான் சாப்ளின்.வறுமையின் அடையாளமாய் வருகை தரும் சாப்ளினை எந்த கொட்டகையும் வரவேற்கவில்லை.பல இடங்களில் வாயிற்காவலனாலேயே விரட்டப் படுகிறான்.இருந்தும் தளராது வாய்ப்பு தேடிய சாப்ளினை ஒரு கருணை உள்ளம் வரவேற்று ஏற்று உன் முகவரி இருந்தால் கொடுத்து போ,வாய்ப்பிருந்தால் அழைக்கிறேன் என்று ஆறுதல் வார்த்தை சொல்லி அனுப்பியது.அது ஒன்றும் வீணாகி விடவில்லை..ஆறுதல் வார்த்தை சில நாட்களில் அதிர்ஷ்ட வார்த்தை ஆகி அழைப்பு வந்திருந்தது அவன் வீட்டுக்கு நடிக்க வர சொல்லி!

சாப்ளின் சந்தோசமாய் நாடக மேடையேறினான்..

முதல் நாடகம் ஜிம்..

நாடகம் தோல்வியை தழுவியது..நாடகத்தை கடுமையாக விமர்சித்த லண்டன் பத்திரிக்கை ஒன்று ஜிம் நாடகத்தில் ஜம்மென்று நடித்து கலக்கியதாய் ஒரு சிறுவனை மேற்கோள் காட்டி ,வரும் காலத்தில் நாடக வரலாற்றில் வசந்தமாய் வலம் வரும் வாய்ப்பு அவனுக்கு இருப்பதாய் வாழ்த்தி எழுதி இருந்தது.

சிறுவனின் புகழ் லண்டன் முழுக்க பரவ,அவனை லட்டு மாதிரி கவ்விக்கொள்ள காத்துக்கிடந்தனர் மற்ற நாடக கம்பெனிக்காரர்கள்..கார்னோ என்கிற கம்பெனி போட்டி போட்டு கவ்விக்கொண்டது சிறுவனை.

தனது அண்ணனுடன் கார்னோ ட்ரூப்பில் நாடக நடிப்பை தொடர்ந்தான் சாப்ளின்.நாடக கம்பெனி அமெரிக்கா சென்று நாடகம் நடத்த அமெரிக்கா முழுக்க புகழில் உயர்ந்தான்.சில வருட நாடக அனுபவத்தை வைத்துக் கொண்டு "கீ ஸ்டோன் ஸ்டுடியோ " தயாரித்த 'நியூஸ்பேப்பர் ரிப்போர்டர்" எனும் படத்தில் கால்பதித்த சாப்ளினுக்கு அந்தப் படம் கை கொடுக்கவில்லை,முழு திருப்பதியையும் தந்திருக்கவில்லை..இடைப்பட்ட நாட்களில் வேலையற்று இருந்த சாப்ளின் ஸ்டுடியோ எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருந்தார்.ஆனால் என்றாவது ஒருநாள் இந்த உலகம் நம்மை திரும்பி பார்க்கும் என்ற திடமான நம்பிக்கை மட்டும் சாப்ளினுக்குள் சாகாமல் வாழ்ந்து வந்தது.

அன்று கீ ஸ்டோன் ஸ்டுடியோ பரவசப்பட்டது..இரண்டு மூன்று படபிடிப்பு அந்த ஸ்டுடியோவில் நடந்தவண்ணம் இருக்க கூட்டம் குழுமி கோலாகலப்பட்டது.அந்த ஸ்டுடியோ நிறுவனர் சென்னட்டுக்கு மட்டும் அந்த காட்சிகள் ஏனோ வெறுப்பை தந்தன..சாப்ளின் நகைச்சுவையை பார்த்தால் கொஞ்சம் மனது மகிழ்ச்சியாகும் என்றெண்ணிய சென்னட் சாப்ளினுக்கு கட்டளை இடுகிறார்.


காலம் கொடுத்த வாய்ப்பை கனிய வைக்க எண்ணிய சாப்ளினின் கண்ணில் அப்போ கிடைத்தது ஒரு தொள தொளா பேண்ட்டும்,ஒரு குல்லாவும்,அளவுக்கு பெரிய காலணியும்,ஒரு கைத்தடியும்தான்,எடுத்துப் போட்டுக்கொண்டார்..செட்டுக்கு வெளியே வந்தார்,சேட்டை செய்தார்,சென்னட் சிரித்தார்,கேனங்கித்தனம் செய்தார் சென்னட் காதலி சிரிப்பில் மெய் மறந்தார்..கோமாளியானார்,கூட்டம் குதூகலித்தது.எல்லோர் மனத்திலும் நிறைந்தார்.

அன்று கோமாளியாய் சிரிப்பு அருள்பாலித்த அந்த உருவஅமைப்புதான் பின்னாளில் "ஆட்டோ ரேசஸ் இன் வெனிஸ்" என்ற படத்திற்கு முதன் முதலாய் கெட்டப்பானது.அதன்பின் சாப்ளின் என்றவுடன் எல்லோர் கண்முன்னும் நிலை நிற்கும் தொள தொளா பான்ட்,குல்லா,கைத்தடி நிறைய படங்களில் நிலைத்துவிட்டது.

இந்தக் காலக்கட்டங்களில் சாப்ளின் காதலில் விழுந்து தோல்வியை தழுவி இருந்தார்,அதன்பின் சில காதல் திருமணங்கள்,பிள்ளைகள் பெற்றது ,விவாகாரத்துக் கேட்டது என ஹாலிவுட் வட்டாரங்களில் பெரிதாக சாப்ளின் வாழ்க்கை பேசப்பட்டுக்கொண்டிருந்தது.

தொடக்கத்தில் மற்றவர்களின் இயக்கத்தில் நடித்த சாப்ளினுக்கு அது முழு திருப்தியை தரவில்லை.தானே நடித்து,இயக்கினால் மட்டுமே தன் எண்ணத்தை,நடிப்பை முழுமையாகக முடியும் என்று சாப்ளின் நம்பினார்.அந்த எண்ணம்தான் பின்னாளில் தன் தாய் சின்ன வயதில் சொன்ன கற்பனை கதைகளின் வடிவமாகவும்,சமுதாய சீர்செய்யும் சீர்மிகு படைப்பாகவும் சிறப்பு பெற்றன.உலகத்தையே மிரட்டி தன் காலடியில் பணிய வைத்த ஹிட்லரை கிண்டலடித்து செய்த படம் ,மூன்று நாட்களாய் ஊண் உறக்கமின்றி வெறிகொண்டு பார்த்து ஹிட்லர் கண்களைக் கூட பணிய வைத்தன.

 சாப்ளின் சாதிப்பார்..


(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


——————————————————————————————————————————————


                                                                                  முந்தைய பதிவைப் படிக்க..சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-2)Widget byLabStrike


1 comment:

  1. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

    ReplyDelete