Friday, February 17, 2012

2.சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள்!

சாப்ளின் என்ற குழந்தையின் ஒருநாள் மேடையேற்றம் ஹென்னாவின் வாழ்வை ஒன்றும் திருப்பிப் போடவில்லை.சாப்ளினை மேடையேற்றி தன் வறுமையைப் போக்கிக் கொள்ளவும் அந்த அன்புத்தாய் ஒரு போதும் எண்ணியதுமில்லை.வறுமை தன்னோடு மட்டும் இருந்து போகட்டும்.தன் மக்களிடத்தில் வறுமை என்ற வார்த்தை இறந்து போகட்டும் என்றே அவள் கனவு கண்டாள்.சிட்னி,சாப்ளின் இருவருக்கும் நல்ல படிப்பை தர வேண்டும் என்றே அந்த தாயுள்ளம் எண்ணியது.ஆனால் காலம் எண்ணியதோ வேறு,வறுமை அவர்களை வாட்டியது,வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் விற்று ஹென்னா குழந்தைகளின் பசியாற்றினாள்.ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு அந்த தாய் பசியாறினாள்.வறுமையில் வாடிய தாயின் வேதனைக் கண்டு சாப்ளின் அண்ணன் சிட்னி தன் சிறு வயதிலேயே வேலைக்கு ஓடினான்.தாயின் வறுமையை தானும் எடுத்துக்கொண்டு போராடினான்.அப்படியும் அவர்களின் வறுமை முழுவதுமாய் விலகுவதாய் இல்லை.அந்தக் காலக்கட்டங்களில் பசி மட்டுமே உண்டு பசியாரினார்கள் சாப்ளின்,சிட்னி,ஹென்னா மூவரும்.அவ்வபோது தன் மக்களுக்கு பசி தீர்க்க அந்த தாய் கொடுத்த உணவு கதைகள்தான்.கற்பனையை காட்டாற்று வெள்ளமாய் உடைத்து விடுவாள்,அவள் கற்பனை செய்வது எல்லாம் கதையாகும்,தெருவில் வரும் போகும் உருவங்கள் எல்லாம் கதாப்பாத்திரமாகும்,எல்லைகளற்று எங்கெங்கோ விரியும் அவள் சொல்லும் கன்னித்தீவு நீளம் கொண்ட கதைகள். பசி தெரியாமல் ருசியான கதைகள் கேட்டு சாப்ளினும்,சிட்னியும் உறங்கிப்போவார்கள்,ஆனால் பின்னாளில் ஹென்னா சொன்ன கற்பனைக் கதைகள்தான் சாப்ளின் மூளையில் உறங்காமல் உயிர் பெற்றன சர்க்கஸ்,மாடர்ன் டைம்ஸ்,சிட்டி லைட்ஸ் போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களாய்!குழந்தைகள் மேலும் மேலும் பட்டினியில் வாடுவது கண்டு அந்த தாயுள்ளம் தாங்கவில்லை.தன் கணவனிடம் நஷ்டஈடு வாங்கியாவது பிள்ளைகளின் வயிறை வளர்த்தாக வேண்டும் என்று அவள் வாஞ்சை கொண்டாள்.வழக்கு தொடுத்தாள்.வழக்கும் அவள் வறுமையைப் போலவே இழுத்தது..தாங்க இயலாத வேதனையில் அந்த தாயுள்ளம் துடித்தது,குமுறலில் நெஞ்சு வெடித்தது,என்ன செய்வது என்ற இயலாமையில் ஏதேதோ தேடினாள்,போராடினாள்.பசி அவர்களைப் பாடாய்ப் படுத்தியது,வறுமை அவர்களை வதைத்துக் கொண்டே இருந்தது!

இந்நிலையில்தான் எதை செய்யக்கூடாது என்று ஹென்னா எண்ணி இருந்தாளோ அதை செய்ய வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு வந்து சேர்ந்தது.அனாதை இல்லத்துக்கு தன் செல்வங்களை அழைத்துக் கொண்டு ஓடினாள்.அனாதை இல்லத்தில் மூவரும் இணைந்தனர்..அங்கே வயது வாரியாக தாய்,மகன்கள் தனித்தனியாகப் பிரிந்தனர்.பகலில்மட்டும் தாய் மகன்களுடன் பாசம் பரிமாறுவாள்,இரவானால் தனித் தனி அறைகளுக்கு செல்லும் நிலை..இப்படியோர் நிலை வந்ததே என்று எண்ணி எண்ணியே வாடி வதங்கிய அந்த தாயுள்ளம் என்ன ஆனதோ தெரியவில்லை மனப்பிறழ்வு அடைந்தது,இந்நிலையில்தான் மனநல காப்பகத்துக்கு அனுப்பப் பட்டாள் ஹென்னா..

பாவம் தாய் ஒருபுறம்,பிள்ளைகள் மறு புறம் வாடினர்..காலம் கண் திறந்தது போன்று அன்று தெரிந்தது.பிள்ளைகளை ஆனாதை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லும் படி சாப்ளின் தகப்பன் சார்லசை வலியுறுத்தியது நீதிமன்றம்..தன் இரண்டாம் மனைவியுடன் வாழும் சார்லஸ் அழைத்து வந்திருந்தான் சாப்ளின்,சிட்னி இருவரையும் அவள் வீட்டுக்கு.வறுமையில் விடுபட்ட இருவரும் இப்போ சித்தி கொடுமையில் சிக்கித் தவித்தனர்.சார்லஸ்,சிட்னி,சாப்ளின் இருவரையும் அருகாமைப் பள்ளியில் சேர்த்தான்.பள்ளி முடித்து ஓர்நாள் வீட்டுக்கு வரும் சாப்ளின் வீடு பூட்டி இருப்பது கண்டு அதிர்ச்சியுற்று ரோடு ரோடாக சுற்றுகிறான்.பசி அதிகமாகி ஓரிடத்தில் உட்க்கார்ந்து தன் அம்மாவை எண்ணி அழுகிறான்.உலகம் அவனைப் பொருட்படுத்தாமல் சாதாரணமாய்ப் பார்த்தபடி செல்கிறது,பசியின் கொடூரத்தை அந்த குழந்தை உள்ளம் உச்சமாய் உணர்ந்த தருணம் அது.அப்படி ஓர் நாளில் ஊரை சுற்றும் தருணத்தில்தான் இசைக்கருவி மீட்டும் சத்தத்தை எங்கோ உணர்கிறான் சாப்ளின்.அந்த இசையை உள்வாங்கி ருசித்தவனுக்கு இசை மீது தீராப்பசி வந்து சேருகிறது.இசை மீது காதல் வயப்படுகிறான்.ஓர்நாள் சார்லஸ் வீட்டுக்கு வெளியே ஹென்னாவின் குரல் கேட்பது மாதிரி உணர்கிறார்கள் சிட்னியும்,சாப்ளினும்.ஓடி போய்ப்பார்க்கிறார்கள்,அது ஹென்னாவேதான்.தெய்வம் அருள் பாலிக்க வந்தது போல் அன்புத்தாய் தங்களை மீட்க வந்து விட்டதாய் எண்ணி தன் தாயை அணைத்து மகிழ்கிறார்கள்.அவர்கள் கனவு பொய்க்கவில்லை,ஹென்னா தன் மக்களின் உடைகளைப் பெற்றுக்கொண்டு அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு சார்லஸ் மற்றும் அவன் இரண்டாம் மனைவி லூயிசிடமும் விடைபெறுகிறாள்.

மீண்டும் வறுமையான ஓரிடத்தில் அவர்களின் வாழ்வு துவங்குகிறது.பிள்ளைகளின் படிப்பு செலவை மட்டும் சார்லஸ் பார்த்துக்கொள்கிறான்.நாளாக நாளாக சாப்ளினுக்கு இசை நடனம் மீது இன்னும் ஈடுபாடு அதிகமாகிறது.. தன் தாயிடம் தன்னை நடனப் பள்ளியில் சேர்த்து விடும்படி நச்சரிக்கிறான்..ஹென்னா தன் கணவனிடம் தன் மகனின் கனவை சொல்லி அவனை நடனப் பள்ளியில் சேர்த்து விடும்படி வேண்டுகிறாள்.புகழ்பெற்ற ஓர் நடனப்பள்ளியில் சாப்ளினை சேர்த்து மகனின் கனவை ஒரு தகப்பனாய் சார்லஸ் நிறைவேற்றி முடிக்கிறான்.இந்த இடமே சாப்ளின் பின்னாளில் சினிமாவின் சிகரத்தை எட்ட ,அவன் கலைகள் பயின்ற களமாகிறது .காலம் ஓடியது..திடீரென ஓர்நாள் சாப்ளின் தகப்பன் சார்லஸ் காலமாகி இருந்தான்.

சாப்ளின் போராடுவான்..


(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


------------------------------------------------------------------------------------------------------------------------------------------


முந்தைய பதிவைப் படிக்க..1.சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள்!
Widget byLabStrike


2 comments:

  1. பசி மட்டுமே உண்டு பசியாறினார்கள்....அருமை நண்பரே

    ReplyDelete
  2. நல்ல பதிவு ! தொடருங்கள் ! நன்றி !

    ReplyDelete