Thursday, December 15, 2011

உனக்கு நான் பரிசில் தர என்னிடத்தில் ஏதுமில்லை!



நிலவையும் உன்னையும்

 ஒப்பிட்டு கவிபாட

எனக்கு கட்டளை!

மேகமொன்றை கண்டாலே

ம(ய)ங்கிவிடும் நிலவை

மோகமது சூழ்ந்த போதும்

மங்காத ஒளியுடன்

ஒப்பிட்டுக்கூற  ஒருபோதும் நான்

ஒத்துக்கொள்ள மாட்டேன்!

----000---

என்னை,மலரோடு

உவமைப்படுத்தி

மடலொன்று வரை !

வாடி போகும் மலரோடு

வாடா மலர் உவமையா?

வாடா மலரும் வாசம் பெற்ற

அதிசயம் நீயா ?

----000---

மானோடு மங்கையை

போற்றி புகழ் பாடி

ஏதேனும் எழுதிப்போ?

மானடித்து வீழ்ந்த புலியை

நான் புராணத்திலும் கேட்டதில்லை!

புலியை வீழ்த்தி புரட்டிய மானை

நான் போர்வைக்குள்ளே புரிந்து கொண்டேன்!

----000---

மயில்போலே,மங்கைக்கு

வண்ணம் கூட்டி,எண்ணம் எழுதி

வர்ணனை இட்டுப்போ!

மழை மேகம் வந்ததென்று

மனமயங்கி களிப்புற்று

தோகை விரித்தாடி

ஏமாற்றம் கண்டதுவோ

உம் கருங்கூந்தல் கண்டமயில்!

----000---

பச்சைகிளியோடு,பைங்கிளிக்கு

வார்த்தை சில இட்டு நிரப்பு!

கிளியைப் பிடித்து

கூண்டிலடைத்து ,இறக்கை வெட்டுகிற

இயல்பான ஆணாதிக்கம்தான்

பைங்கிளியை வீட்டிலடைத்து

பழமையை பாதுகாத்துக் கொள்கிறது!

----000---

மீனுக்கும்,கண்ணுக்கும்

ஏதும் கதையிருந்தால்

சொல்லிப்போ!

மீனுக்கு வலை விரித்து

மீன் சிக்கி பார்த்ததுண்டு

மீன் விரித்த வலையினிலே

மீனவன் சிக்கிய

கதை கேட்டதுண்டோ!

----000---

உடுக்கை,இடை கோர்த்து

பாடல் ஒன்றை

பாடிப் போயேன்!

உடுக்கை குலுங்கிட

சத்தம் வருகிறது

உன் இடை குலுங்கிட

சத்தமில்லாமல் சங்கதி வருகிறது!

----000---

வேலுக்கும்,விழிக்கும்

சொல்சாயம் பூசி பாரேன்!

வேல் வீசி

வீழாத வெறியும்

விழி பேசி

வென்ற அறமும்

அறப்புரட்சியின் முதல் வித்து!

----000---

போதும் போதும் புகழ்ந்தது போதும்

உனக்கு நான் பரிசில் தர

என்னிடத்தில் ஏதுமில்லை!

ஏ பெண்ணே !

உன்னிடத்தில் பரிசிலாய்

உன்னைத் தவிர ஏது கேட்பேன்!


Widget byLabStrike


No comments:

Post a Comment