Friday, July 26, 2013

நாளை ரம்யா அமெரிக்கா போகிறாள்!


ரம்யா...இந்த பெயரை கேட்டபோதெல்லாம் பிரவீன் முகத்தில் அப்படியோர் மகிழ்ச்சி..உற்சாகம்.

இந்த ஒரு வாரகாலமாகவே ..அவன் உதிர்க்கும் வார்த்தைகளில் அதிகம் வசப்பட்டது ரம்யாதான்.

ரம்யா..ரம்யா..ரம்யா..ரசனையோடு ராகம் பாடிக்கொண்டிருந்தான்.அவன் மற்றவர்களின் அலைபேசி அழைப்பை எடுப்பதற்கும்,ரம்யாவின் அழைப்பை எடுப்பதற்கும், ஏனைய வித்தியாசங்கள்.

ஹலோ..என்பதே ஹ..லவ் ரம்யா என ரம்மியமாகிப் போயிருந்தது.

இந்த சில நாட்களாக எங்கள் அலுவலக தேநீர் இடைவேளையை அதிகமாக ரம்யாவே ஆக்கிரமித்திருந்தாள்.

மச்சி..இன்னைக்கு அவள் அப்படி பேசினா...இப்படி பேசினா..உன்னோட பேசினா டைம் போறதே தெரியல..உன் வாய்ஸ் சான்சே இல்ல..சூப்பர்..நீ ரொம்ப மேன்லி..யூ சோ கியூட்..என தன் காதுகளின் ரம்யா பாய்ச்சிய தேன் துளிகளை எங்கள் காதுகளில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

இதனால் சிலரின் காதுகளில் புகைச்சல்.

நாங்கள் காதல் நிறைவேற,கன்னியை மடக்க கருத்து சொல்லும் ஆசாமிகளாயிற்றே..அட்வைஸ் தானே காசா கொடுக்கப் போறோம்.அதனால் எங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை தேர்தல் அறிக்கை போல இலவசமாய் வழங்கி கொண்டிருந்தோம்.

மச்சி சத்யம் தியோட்டருக்கு கூப்பிட்டு பாருடா..வராளா பாப்போம் ?குமார் தமக்கு தெரிந்த ஆலோசனையை அறிமுகம் செய்து வைக்க..ஆளாளுக்கு பிடித்துக் கொண்டார்கள்.

பிரவீன் வேணாண்டா..இப்போ தான் ஒரு வாரமா பேசிட்டிருக்கான்னு சொல்ற.. அதுக்குள்ள கூப்பிடாத..உன்ன பத்தி தப்பா நெனச்சுக்கப் போறா..கொஞ்சநாள் போகட்டும்..இது நான்.

சரி ஒரு காபி ஷாப் கூப்பிட்டு பாரு ,அது அவ்ளோ தப்பா தெரியாது-இது ராஜு.

பரவால ப்ரவீனுக்கு லக்குதான்... தானா தேடிவருது பொண்ணு..ஹ்ம்ம்.. நமகெல்லாம் வருதா ஏக்கப் பெருமூச்சுடன் மணிகண்டன்.

ஆமாம்..சென்றவாரம்..பிரவீன் அலுவலகம் வரும்போது தான் அந்த அழைப்பு அவனுக்கு வந்திருக்கிறது.தன் பெயர் ரம்யா எனவும்,உங்களை நான் பார்த்திருக்கிறேன்..உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..உங்கள் ford icon காரை பின் தொடர்ந்திருக்கிறேன் .உங்கள் கார் எண்.உங்கள் வீடு கூட வளசரவாக்கம் தானே? என அவளால் தொகுக்கப்பட்ட அடையாளங்களில் ஆமாம்..ஆமாம்..என்று மட்டுமே சொல்லி அப்பிட்டு ஆகி இருக்கிறான் பிரவீன்.

கிட்ட தட்ட மௌனம் பேசியதே படம் ஓடிக்கொண்டிருக்கிறது அவன் வாழ்வில்..

அதற்குப் பின்தான் நான் முதலில் சொன்னவையெல்லாம் நடந்து முடிந்திருந்தது..

சரி ட்ரீட்டு எப்போடா ??கருத்து ஆசாமிகளின் குரல்களை உடைக்கிறது குமாரின் குரல்..அதைத் தொடர்ந்து அனைவர் குரலும் ட்ரீட்டை எதிர்ப் பார்த்து...

மச்சி முதல அவள பாக்குறேன் அப்புறம் பெரிய ட்ரீட் கொடுக்குறேண்டா என்கிறான் பிரவீன்.

அதெல்லாம் முடியாது ..அவனவன் தேடி போனாலே பொண்ணுங்க டிமிக்கி கொடுக்குது..உன்ன தேடி பொண்ணு தானா வருது.. அதுக்கே நீ முதல ட்ரீட் கொடுக்கணும்...என்கிறான் ராஜு.சரி என்று வேறுவழியின்றி ஆமோதிக்கிறான் பிரவீன்.

ஒருவழியாக இன்று..ஒத்துக்கொண்டவனின்,ஒத்துக்கொள்ளப் பட்டவனின் ட்ரீட் விமரிசையாக நடந்து முடிந்திருந்தது.

அலைப்பேசியில் என் அறை நண்பனை அழைக்கிறேன்..மச்சி ரொம்ப தேங்க்ஸ் டா..உன்னோட மிமிக்ரி சூப்பரா வேல செஞ்சிடுச்சிடா ..பையன் ட்ரீட் தந்துட்டான்..

ஆமாம் ரம்யாவ அடுத்து என்ன செய்யப் போற??என்கிறேன்..நாளைக்கு அவள அமெரிக்கா அனுப்பி வைக்கப் போறேன் என்கிறான் ஒரு வாரமாய் ரம்யாவாய் ரம்மியக் குரலில் பேசிக்கொண்டிருந்த என் நண்பன்..


Widget byLabStrike


4 comments:

 1. என்னவொரு நாடகம்...! அவன் நண்பனே இல்லை...!

  ReplyDelete
 2. ஹா ஹா கதை அருமை அண்ணா !! ட்ரீட்.. ட்ரிக்..

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம்..வச்சுட்ட போச்சு:)

   நன்றி..

   Delete