Monday, November 1, 2010

இன்றெனக்கு பிறந்தநாள்..வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..

பிறந்தநாள் என்றதுமே பள்ளிப் பருவம் தான் நெஞ்சில் நிழலாடுகிறது.என் பள்ளிப் பருவத்து ஒவ்வொரு ஆண்டின் பிறந்தநாளையும் ஆர்வமிகுதியாய்  எதிர்ப்பார்த்துக் காத்துக் கிடப்பேன்.ஆறு மாதங்களுக்கு முன்பே ,காலெண்டரில் தேதி கிழிக்கும் போதெல்லாம் நவம்பர் 1  ஐ தேடி தேடி தேய்த்திருப்பேன்.புதுசட்டைக்கான எதிர்ப்பார்ப்புதான் அது.சக வகுப்பு நண்பர்களுக்கும் மிட்டாய் வாங்கிப் கொடுப்பதற்க்காகத்தான் அத்தனை அலாதி.ஆர்வம் எல்லாமே!!

பிறந்தநாளன்று காலை எழுந்தவுடன் கடவுள் முகத்தில் விழி.இது என் தாய் எனக்கிடும் கட்டளை.அறியாத வயது வரை அதுதான் எனது பணியும்.

காலம் போகப் போக என் ஏழாம் அறிவு விழிப்புக்கு வரவே அதனை நான் செய்வதில்லை.சாமி முகத்தில் விழிக்கமாட்டேன் என சண்டையிடுவேன்.அதற்குப் பின் என் தாய் அதற்கு மாற்றாக இன்னொரு வழி கண்டுப்பிடித்தார்.

பிறந்தநாளன்று எழுந்தவுடன் கண்ணாடியில் உன் முகத்தைப் பாருப்பா என்று.(எனக்கு தெருவோரங்களில் விற்கப்படும் "என்னைப் பார் யோகம் வரும்" கழுதை படம் ஞாபகத்துக்கு வரும்)என் தாய் நீதான் கடவுள் என்று மறைமுகமாய் சொல்லியிருக்கிறார் போலும்.எது எப்படியோ..சாமிப் படத்த விட நம்ம படம் ஓகே என்று கண்ணாடியை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.பள்ளிப்பருவத்தில், பிறந்தநாளன்று என் தாயும் ,தந்தையும் என்னிடம் சொல்லி அனுப்புவார்கள்.இன்னைக்கு யார் கிட்டயும் பிரச்சினை வச்சுக்காதப்பா..சந்தோசமா இரு என்று.அன்னைக்கு பிரச்சினை வந்தா அந்த வருஷம் முழுக்க வரும் என்பது அவர்களின் பழைய நம்பிக்கை.

பள்ளிப்பருவம் கடந்து கல்லூரிப் பருவத்தில் வருகின்ற பிறந்தநாள்கள் எனக்கு சுவாரசியம் தருவதில்லை.வயதாகிறது..நீ முதுமை எய்கிறாய் என்பதை நினைவு படுத்தும் நாளாவே எனக்கு பட்டது.

ஆனாலும் என் நண்பர்களால்,என் பிறந்தநாள் மட்டும் விழாக்கோலம் பூணும் எங்கள் கல்லூரி விடுதியில்..விடுதியில் களைகட்டும் பிறந்தநாள் விழா என்றால் அது என்னுதையது தான் அப்போ.கையில் காசிருக்காது.பார்ட்டி வைக்க பணம் இல்லாத நாட்கள் அவை.ஆனாலும் பிரமாண்டத்தின் பில்ட் அப் இருக்கும்.எல்லாம் என் கல்லூரி நண்பர்களின் கைவண்ணம் தான்.
அப்படித்தான் அன்று உறங்கிக்கொண்டிருக்கிறேன்.இரவு 12   மணிக்கு எனக்கு தெரியாமல் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டி,மெழுகுவர்த்தி,கேக் கூட்டணிக்கு மதுவுடன் எனக்கு தெரியாத இருட்டில் ஆரம்பிக்கிறது.உறங்கிக்கொண்டிருக்கும் என்மீது பாசமாக போர்வை போர்த்தப்படுகிறது.இருட்டில் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேணாலும் என்னை அடிக்கலாம் இதுதான் நண்பர்களுக்கு,நண்பர்களால் இடப்பட்ட கட்டளை.எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்பா என்கிற ரீதியில் என்னை அடித்து பிளந்து விட்டார்கள்..அவர்கள் எனக்கு கொடுத்த விலைமதிப்பற்ற  பிறந்தநாள் பரிசும் அதுதான்.பின் மின்விளக்கு போடப்பட்டு கேக் பிளக்கப்படுகிறது.
அடுத்த பிறந்தநாள் அன்று நான் இயல்பாக பார்க்கும் கண்ணாடியை தேடுகிறேன்.பின்பக்கம் பிம்பமாய் வாழ்த்து தெரிகிறது.கழிவறையில் சென்று அமர்கிறேன் அனைத்து சுவர்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.ஹாஸ்டல் சுவர் முழுக்க நண்பர்களின் கைவண்ணங்கள்.எங்கும் காணினும் எனக்கு வாழ்த்துகள்தான்.அவரவரின் கை வண்ணத்தில்,நான் கார்டூனாக,போஸ்டராக,போட்டோவாக ஆங்காங்கே பிரதிபலிக்கிறேன்.அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது.

இன்று அந்த நண்பர்களனைவரும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பணியில்..கழிவறையில்  கலைவண்ணம் காட்டிய நண்பன் இன்று தமிழ் திரையுலகின் முக்கிய கலை இயக்குனன்.
இருந்தும் எனக்காக நேற்றிரவு அனைவரும் ஓரிடத்தில் ஆஜர்..அராஜகம்..அட்டகாசம்..unlimitted கலாட்டா..ஆரம்பமானது.
இரவு  12 மணியிலிருந்து ஏனைய பழைய,புது தோழ,தோழிகளின்,உறவுகளின் வாழ்த்துக்கள்..பதிவுலகம்,சமூக வலைப்பின்னல் நண்பர்கள் என,வெவேறு நாடுகளிலிருந்தும் வாழ்த்துகளும்,அலைபேசி அழைப்புகளும்...என்னுள்  புது உற்சாகம் கரை புரண்டது.
ஒவ்வொரு பிறந்தநாளும் இப்போ வயதாகிறது என்பதை எனக்கு உணர்த்துவதில்லை.மாறாக எவ்வளவு புதிய மனிதர்களை நட்பாக,உறவாக பெற்றிருக்கிறேன் என்பதை, வாழ்வதற்கான அர்த்தத்தை,எனக்கு உணர்த்த ஆரம்பித்து விட்டது.

குறிப்பு:வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


Widget byLabStrike


No comments:

Post a Comment