Friday, August 27, 2010
இது ஓர் தொடர் பதிவு..நமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு..

சிறுவயதில் நடந்த எத்தனையோ மறக்க முடியாத நினைவுகளை நம் மனதிற்குள் தேக்கி வைத்திருப்போம்..வாய்ப்பு கிடைக்கின்ற போது அதை எண்ணி நாம் தனியாகவோ,இல்லை நண்பர்கள்,உறவினர்களோடோ சிலாகிப்போம்..அசை போடுவோம்..ஆமோதித்து மகிழ்வோம்..அவ்வாறான ஒவ்வொருவருக்குள்ளும் ஊறிக் கிடக்கும் மறக்க இயலாத மலரும் சிறுவயது நினைவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இத்தொடர் பதிவு....ஆரம்பித்து வைக்கிறேன்..நண்பர்கள் அவரவர் அனுபவித்த அக்கால ஞாபகங்களை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அது ஒரு கனாக்காலம்..சிறுவயது காலம்..படிக்க சொல்லி அப்பா,அம்மா,சித்தப்பா மற்றும் ஆசிரியர் மிரட்டலுக்கு பயப்படுவதைத் தவிர வேறொன்றிர்க் காகவும்,பயமறியாக்காலம்.

பாம்பைக்கண்டால் படை வேண்டுமானால் நடுங்கும்..பாம்பின் புற்றுத்தேடி,மரமேல்,வேலிமேல் பாம்பைத்தேடி படை எடுத்து,கல்லால் போர்தொடுத்தக் காலம்.இறந்த பாம்பை அறிந்து கொள்ள,காலால் உதைத்த பருவம்.காடை முட்டை என்றெண்ணி ,பாம்பு முட்டையைக் களவாடிய நாட்கள்...

நண்டு பிடிக்க பொந்தில் கைவிட்டு ,பாம்பு பிடித்த ஆறு...பிடித்தப் பாம்பை கையிலேந்தி, விலாங்கு மீனென்ற விவரமறியா வயது..

தலையாட்டும் ஒணான்கள் மீது கொலைவெறி கொண்டலைந்த உள்ளம்..உயிர் ஓணான் பிடித்து சித்ரவதை செய்து,அதன் துயர் ரசித்த ரசனை..

கள்ளிச்செடியில் கல்வெட்டு பொறித்து,காதல் சுவடெழுதிய நினைவு..சப்பாத்திகள்ளியின் பழம் சுவைத்து வாய் சிவந்த அழகு...சிவந்தப் பழங்களை வாயிலடக்கி வார்த்தை வற்றிய பேச்சு..கரடேறி காரை பழம்,ஆனாப் பழம் ,நாவல் பழத் தேடல்..

வீட்டிற்கு தெரியாமல் கோலி ஆடி,கில்லி அடித்து அடிவாங்கிய அனுபவம்..ஒன்றாய் அமர்ந்து கூட்டான் சோறாக்கி சமத்துவம் பகிர்ந்த அறிவு.

நொங்கு வண்டிக்கும்,டயர் வண்டிக்கும் வாக்கப்பட்ட வாழ்க்கை..மாங்காய் திருடவும்,கொய்யா பறிக்கவும் பழக்கப் பட்ட பயணம்...

களிமண் பொம்மை செய்து,குண்டுமணி கண்செருகிய கலைநயம்.மழைக்காலங்களில் மணல் வீடு கட்டுகின்ற மட்டற்ற மகிழ்ச்சி.

பூவரசு இலையில் பீப்பி செய்து,ஆமணக்கு இலையில் புல்லாங்குழல் செய்து ஊதிய ஞானம்..

பொன்வண்டு தேடியலைந்த பொன்னான பொழுது..புசு புசு வெல்வெட்டு பூச்சியை தடவிப்பார்த்த பூரிப்பு.

மாடு சவாரிக்காய் மாடுமேய்க்கும் ஆசை.ஆட்டுக்கெடாவுக்கு காயடிக்க கொண்டுபோய் அதன் கால்களை இறுக்கி பிடித்து இறுகிய மனம்.செருப்பு போடாத கால்கள் சிறை கொண்ட முட்கள்..ஆனாலும் சீற்றம் குறையாத நடை.தேனெடுக்கப் போய் ஈ விரட்ட, தெருத் தெருவாய் ஓடிய தீஞ்சுவை நாட்கள்..மரமேறி நொங்கு குலை வெட்டுவதற்கு பதிலாய் நான் பிடித்திருந்த பனை இலை வெட்டி கீழ்விழுந்து நுரை தள்ளியும் புறமுதுகு காட்டாத புறநானூறு.ஆற்றங்கரையில்,மரவல்லி காட்டில் தெரியாமல் கண்டுகளித்த அகநானூறுகள்..

சேற்றுவயலில் நாற்று தூக்கிப் போட்டு ,பரம்பு பலகையில் ஏறி அமர்ந்து,தழை மிதித்து ,தாத்தாக் கொடுக்கும் காலனாக்காய் காவல் காத்த ஏக்கம்... மறைக்கும் தலைகளுக்காய் மணல் மேடு குவித்து ,மேலேறி அமர்ந்து படம் பார்க்கும்,பார்த்த இடத்தை ஈரமாக்கும் ,டூரிங் டாக்கிஸ் அனுபவம்.

குரங்கு பெடல் சைக்கிள் ஓட்டி குதிரை சவாரி செய்த இன்பம்.நெல்லறுத்து பொனையடிக்க மாடு பிடிக்கப் போட்டி.

தெருவோர அகன்ற வெண்திரையில் இலவச படம் பார்த்த பாக்கியம்.தூர்தர்சன் பார்க்கவே தொலைதூரத்து வீட்டை குழுமிவிட்ட ஆக்கிரமிப்பு.

15 பைசா போஸ்ட் கார்டால் உயிர்வாழ்ந்த உறவுகள்.தொலைபேசியை தொட்டுப் பார்க்கவே ஏக்கம் கொண்ட மனது.புது சட்டைக்காய் தீபாவளி,பொங்கல் எதிர்ப்பார்ப்பு..டிரவுசரை விட்டு பேண்ட்டு சட்டை போட்டதில் பேரானந்தம்.

தபால் பெட்டி டிரவுசர்கள்..பள்ளிக்கு மஞ்சள் பை தூக்கிய மலரும் நினைவு..புத்தகம் நடுவே ராணி காமிக்ஸ் ஒளித்து படித்த ரம்மியம்.படிக்கும் பள்ளியில் ஓடு விழுந்து மண்டை உடையும் மாணவர்கள்..காக்கைக்கும்,எங்களுக்கும் ஒன்றாகிவிட்ட மரத்தடி வகுப்பு...அப்பப்பா..இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம்..இன்னும் இருக்கிறது ஏனைய நினைவுகள்.அக்காலம் அழகிய பொற்காலம்...

கணினிப் பெட்டிக்குள் கனவாய் முடங்கிப்போனதே இக்காலம்.

இப்பதிவை தொடர்ந்து தன் சிறுவயது நினைவுகளை,நண்பர் ஆதித்தகரிகாலன் தன் களர்நிலத்தில் பயிர் செய்வார்...

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நினைவுகளை தொடர்பவர்கள்:

1.படைப்பாளி -கருப்பு,வெள்ளையில் கலர்புல் நினைவுகள்..

2.களர்நிலம் -என் நினைவுகளின் நிர்வாணம்.

3.சகோதரன்-நானும் என் கிராமமும்

4.இதயம் பேத்துகிறது -நெஞ்சில் இட்டக் கோலம் எல்லாம்……

Widget byLabStrike


No comments:

Post a Comment