Saturday, July 3, 2010

அன்னைப் பாசம் Vs ஆணாதிக்கம்

இன்று காலை நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்திருக்கும் போது,அந்த நண்பர் சற்று அலுப்புடன் அந்தக் கருத்தை வெளியிட்டார்.நடுத்தர வயதை தாண்டி,முதுமையின் முகப்பில் இருப்பவர் அவர்.என்னங்க வாழ்க்கை இது...புள்ள,பொண்டாட்டி,வீட்டு லோன்,பர்சனல் லோன்னு ஏகப்பட்ட பிரச்சினைகள்....கொஞ்சம் வாழ்க்கை சக்கரத்தை, பின்னோக்கி சுழல விட்டு ,குழந்தைப் பருவத்திற்கு மீண்டும் போகும் வாய்ப்புக் கிடைத்தால்,எந்தக் கவலையுமின்றி, தாயின் மடியில் மீண்டும் தவழ்ந்து,தாலாட்டு கேட்க்குமோர் கொடுப்பினைக்  கிடைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.அறியாதப் பருவத்தில் இது நமக்கு தெரிவதில்லை.நான்,அன்பையும் அரவணைப்பையும் காட்டிய தாயிடம் சண்டையிட்டிருக்கிறேன்.ஒழுங்காப் படி என்று அதட்டும் அப்பா மீது கோபம் கொண்டிருக்கிறேன்.இன்று நானும் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருக்கிற போதுதான் அதன் அருமையும்,பெருமையும் புரிகிறது என்றார்..

அதை சற்று அசைபோட்டு பார்த்த போது ,என் பள்ளிப் பருவத்தில் நடந்த, அந்த பழைய ஞாபகம் என்னை ஆட்க்கொண்டுவிட்டது.அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு..அப்போதெல்லாம்,என் தாய் தினமும் அதிகாலை 5 மணிக்கு என்னை எழுப்பி விட்டு,வர காப்பி (கருப்பு சாயா) போட்டுக் கொடுத்து,என்னைப்  படிக்க சொல்வது வழக்கம்.ஆனால் படிப்பது போன்று பாவலா காட்டி தூங்கி வழிவது என் பழக்கம்(சொல்லவா வேணும் படின்னு சொன்னா, நமக்கு அப்போ வேப்பங்காய் சாப்பிடுற மாதிரி..இப்போதானே தெரியுது படிப்போட அருமை).சமையல் வேலைகளைப் செய்து கொண்டே,இடையிடையே நான் படித்துக் கொண்டிருக்கிறேனா ,இல்லை தூங்கிக் கொண்டிருக்கிறேனா என எட்டிப் பார்ப்பார் என் தாய்..நான் தூங்கிக் கொண்டிருந்தால்,மீண்டும் எழுப்பிவிட்டு... இரு உன் அப்பாக்கிட்ட சொல்றேன்,அவர் ரெண்டு உதை போட்டாதான் சரிப்படுவே.என்று சில அர்ச்சனைகளையும் அள்ளி வழங்கி அப்புறம் நகர்வார்.எனக்கு எரிச்சலாய் வரும்..வெறுப்பை வெளிக்காட்டினால் என் அப்பாவின் அடியை யார் தாங்குவது என்று வந்த வெறுப்பை உள்ளடக்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பேன்.பாவ்லாவை தொடர்வேன்.

இப்படியே என்னில் அடங்கி இருந்த வெறுப்பும்,எரிச்சலும் அன்று அரங்கேறும் என நான் அப்போ அறிந்திருக்கவில்லை.மாலை பள்ளி முடித்து ,வீட்டுக்கு வந்து, சாப்பிட்டு முடித்து, அரட்டை கச்சேரியில் அமர்ந்திருக்கிறேன்..அம்மா படிக்க சொல்லி ஆரம்பிக்கிறார். நான் அதை பொருட்படுத்தவில்லை..அவர் மீண்டும்,மீண்டும்... "உன் அப்பா படுற கஷ்டத்த பாருடா..படிடா..உங்களுக்காக அவர் ஒழச்சி ஓடா தேஞ்சி போய்ட்டார்..போய் படி..உங்களதான் அவர் கனவா சொமந்துகிட்டு இருக்காரு..போ போய் படி",படி என வலியுறுத்த,அப்போ.. அம்மா சொல்லின்  மகிமை அறியாத  நான்,வெறுப்பின் உச்சத்தில்,அம்மாவின் கையை முறுக்கிப் பிடுத்து பக்கத்திலிருந்த கரண்டியை எடுத்து வேகமாய் அடித்துவிட்டேன்.கரண்டி வளைந்து விட்டது..என் தாயின் கை பலமான  அடிப்பட்டதில் வீங்கி விட்டது."என்னை கை நீட்டி அடிக்கிற அளவுக்கு உன்  கை நீண்டு  போச்சா??உன் அப்பா வரட்டும் சொல்றேன்னு" அம்மா அழுது,புலம்பி விட்டார்..முதன்முறையாய் என்னில் வெளிப்பட்ட ஆணாதிக்கத் திமிர் அது.தந்தையிடம் இந்தக்  கோபத்தை காட்டியிருக்க இயலுமா??வீட்டை விட்டு  விரட்டி அல்லவா அடித்திருப்பார்.ஆனால் தாய் பொறுத்துக் கொள்வார் என்ற தைரியம் தானே என்னை இப்படி செய்ய வைத்திருக்கிறது..

அப்பா அப்போ ஓர் துணிக்கடையில் தொழிலாளி..வேலை முடித்து அவர் வீட்டுக்கு வர மணி இரவு 9.30 ஆகிவிடும்..அவர் வீட்டிற்கு வரும் நேரம் நெருங்கவே,எனக்கு பயம் பற்றிக்கொள்கிறது..அப்பா வந்தவுடன் அம்மா எப்படியும் நடந்ததை சொல்லி விடுவார்..இன்று எனக்கு சரியான உதை இருக்கிறது,என்று என் மனது சொல்கிறது..போர்வையைப் போர்த்திக் கொண்டு,தூங்கி விட்டது போல நடிக்கிறேன்.

அப்பாவும் வந்துவிட்டார்...அம்மா,அப்பாவுக்கு உணவு பரிமாறும் போது,அம்மாவின் அடிபட்டு ,வீங்கியக்  கையை பார்த்து விட்டார் போலும்.."என்னடி..என்னாச்சு கைக்கு" என வினவுகிறார்...

பயத்தின் உச்சத்தில் பதறியபடி போர்வைக்குள் புதைந்திருக்கிறேன் நான்..அம்மா என்ன சொல்லப் போகிறாரோ..நமக்கு, எவ்வளவு உதை விழப்போகிறதோ, உள்ளுக்குள் உதறல் எடுக்கிறது எனக்கு..என் தந்தையுடன் சேர்ந்து அம்மா சொல்லும் பதிலை நானும் எதிர் நோக்குகிறேன்.

"ஒன்னுமில்லைங்க.. பாத்திரம் துலக்கும் போது வழுக்கி விழுந்துட்டேன்".. என பிள்ளையைக் காட்டிக் கொடுக்காமல், காப்பாற்றிக் கொடுக்கிறது  தாய்ப்பாசம்.

Widget byLabStrike


2 comments:

  1. பரவாயில்லை.. கொஞ்சம் இந்த மாதிரி எழுதுங்க.. அடுத்தவனை குத்தம் சொல்லி எழுதாமல் இப்படி எழுதலாமே...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே...பொது வாழ்க்கைக்கு வருபர்கள்,மக்களை மையம் கொண்டு எடுக்கப் படும் திரைப்படங்கள்,சாமியார் போர்வையில் ஏமாற்றும் அயோக்கியர்கள் போன்றவர்களைத்தான் நான் விமர்சித்து இருக்கிறேனே தவிர தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த நபரையும் குத்தம் சொல்லி எழுதுவதில்லை நண்பரே..பொது இடத்தில் நடக்கும் தவறு,பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டுதல் குத்தம் சொல்வதாய் ஆகாது நண்பரே..பொது இடத்தில் நானும் தவறாக எழுதினால் அதை விமர்சிக்கின்ற உரிமை உங்களுக்கு உள்ளது அல்லவே..அது எப்படி குத்தம் ஆகும்..மற்றபடி யாரையும் குத்தம் சொல்வது போல் என் எழுத்து அமைந்திருந்தால் மன்னியுங்கள் நண்பரே..

    ReplyDelete