Thursday, July 22, 2010

ஓணானை பிடித்தப் பேய்



அப்படி என்ன செய்தது,அந்த தலையாட்டி ஓணான்?? அதன் பிறவி புத்தியில் அது தன் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது...அந்த ஓணான்,சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்ததாக கூறி, இன்னும் சில அசிங்கமான எக்ஸ்ட்ரா பிட்டுகளை சேர்த்து போட்டு விட்டு,தன் தாத்தா சொன்னதாக,சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.அப்படித்தான் என் வயதை(பள்ளிப் பருவத்து பத்து வயது அப்போ) ஒத்த வயதுள்ள அனைத்துப் பசங்களுக்கும் அந்த செய்தி பரப்பப் பட்டிருக்கிறது.(நல்லவேளை மண்ணுளி பாம்பு மேட்டர் மாதிரி காசு பாக்குற மேட்டர் எதுவும் பரப்பப் படல..இல்லேனா ஓணான் இனமே இல்லாமப் போயிருக்கும்.)

அப்போதிலிருந்து வேலியில் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஓணான் ,எங்களின் எதிரியாகிப் போயிருந்தது.உயிர் ஓணானை நைலான் கயிற்றில் சுருக்கு போட்டு பிடிப்பது சாமார்த்தியம்..பிடிபடாத உயிர் ஓணான் ,எங்களின் அடிபட்டடாவது இறந்து விட வேண்டும்,இது நாங்கள்  வகுத்த நியதி.

எங்களிடம்,மாட்டிக் கொண்ட ஓணான்கள் மண்டையைப் போடுவதற்குள்ளான நேரத்தில் தன் மரண வேதனையை அனுபவிக்க ஆரம்பிக்கும்(சிவன் விடுத்த கட்டளை ஆயிற்றே!).உயிரோடு தூக்குக் கயிற்றில் மாட்டும் ஓணான்களுக்கு வெகுவிமரிசையான திருவிழா உண்டு.ஓணானின் வாய்த்திறந்து,கள்ளிப்பால் கொடுத்து அதன் பசிப்போக்கி,பின் அதன் கண்களில் கள்ளிப் பாலை ஊற்றுவோம்.சில நேரங்களில் பற்ற வைக்கப்பட்ட பீடி அதற்கு கொடுக்கப் பட்டு அது புகை உறுஞ்சுவதை ரசித்திருப்பதாகவும் ,என் நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.வாயினில் ஊற்றப்பட்டக் கள்ளிப்பால் அதன் உயிர் குடிக்க ஆரம்பிக்கும்..கண்களில் ஊற்றப்பட்டது அதன் பார்வையை பறிக்க ஆரம்பிக்கும்.. உயிர் வேதனையில் அதன் ஆட்டம் ஆரம்பிக்கும்.அப்போ எங்கள் ஆர்ப்பரிப்பு ஆரம்பிக்கும்.

ஓணானுக்கு பேய் பிடித்துவிட்டது..அப்படியே விட்டு விட்டால் ஆவி நம்மை பிடித்து விடும் ,என்று சொல்லி ,வேதனையில் குதிக்கும் ஓணானை நீண்ட குச்சி கொண்டு அடிக்க ஆரம்பிப்போம்..அதன் ஆவிப் போகும்வரை.

அப்போ அறியாமையில்,மகிழ்ச்சியின் ஆராவாரத்தில் நான் செய்தக் கொடூரக் கொலைகளுக்காக,இப்போ என்னைப் பார்த்து மண்டையாட்டும் ஓணான்களிடமெல்லாம் மன்னிப்பு கேட்க்கிறது மனசு.மன்னித்து விட்டதாய் மண்டையை ஆட்டி வைக்கிறது ஓணானும்.

Widget byLabStrike


4 comments:

  1. நல்ல நினைவுகள்

    ReplyDelete
  2. ஹா ஹா... பெரிய தீவிரவாதியா இருந்திருக்கீங்க போல இளமையில....

    ReplyDelete
  3. ஆம் நண்பரே ...கொலை கூட ரசிக்கப்பட்ட காலம் அது..

    ReplyDelete