Friday, January 29, 2010

சுமைதாங்கி



அந்த ஆற்றோர

அரச நிழலிலே

நான்கடி உயரத்தில்

மூன்று கல்லாய்

இரண்டு காலில்

இறுமாப்பாய் இருந்திட்டாய் நீ!

எங்கள் பள்ளிப்பருவ

காலம் முழுக்க

புத்தக மூட்டை சுமந்து

எங்கள் கூனான

முதுகையும் கூடவே சேர்த்து,சுமந்து

கூனின்றி நின்றிட்டாய் நீ!

வறுமைக்கோடாய் விலாத் தெரியும்

எம்மூர்..

விறகு சுமக்கும் கிழவிகளுக்கு..

மூச்சு வாங்கவும்,முட்டுக்கொடுக்கவும்

நீ!

பேச்சு வாக்கில் பேச்சியம்மா

சொல்லிவைத்தாள்..

வாயும்,வயுருமா இருந்தவ

இறந்து போக..

பாலாப்போணவ பாரமிறக்க

பாண்டிராசா செஞ்சு வச்சான்னு..

எம் கலைந்து போன

காலக்கனவின்

வழிமீது நின்றிட்ட

அந்த வயதான

சுமைதாங்கி..இப்போ

இடறிய காலில்

இடிந்து போய் கிடைக்கிறது...

Widget byLabStrike


No comments:

Post a Comment