Tuesday, January 12, 2010

புத்தக திருவிழாவின் நாயகன்

சென்ற ஞாயிறு காலை 10 மணிக்கு புத்தக திருவிழாவில் புகுந்த எம் பயணம்,

மாலை திருவிழா..நம்ம தெருவிழா..அதாங்க சென்னை சங்கமத்தில் திளைத்து வெளிவர..மணி இரவு 10.

அலைமோதும் கூட்டம்..அடுக்கப்பட்ட புத்தகங்கள் என புத்தக திருவிழா புது எழுச்சி கண்டிருந்தது.

நான் எப்போதோ எங்கள் வீட்டில் பார்த்த கடல்புறாவை, ஓர் பதிப்பகத்தில் நோக்க..அதனை எடுத்து தடவி பார்த்தேன்..பல நடுத்தர வயதின் கரங்கள் கடல்புறாவை தொட  தவறவில்லை..அதிலும்,ஹ்ம்ம்..எம் சின்ன வயசுல வாரம்,வாரம்,வாங்கி தேடி சேகரித்து தொகுத்து படித்தது. ..அதெல்லாம் ஒரு காலம்..என்று தனது வரலாற்று பின்புலத்தை சொல்லியும் சென்றன.சாண்டில்யனின் சாதனைதான் என்னே!! ..ஒரு தலைமுறையையே கட்டி வைத்திருந்திருக்கிறதே! என என்ன தோன்றியது.

அந்த நடுத்தர வயது வார்த்தைகளை வாங்கி நகர்ந்தபோது..இளசுகளின் பார்வையெல்லாம் தலைவர் பிரபாகரன் அச்சிடப்பட்ட அட்டை படங்களை தரிசித்தும் , வாசித்தும் நகர்ந்தன..நிச்சயமாய் இந்த ஆண்டு புத்தக திருவிழாவின் நாயகன் என்றால் அது உயர்திரு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான்.அனைத்து பதிப்பகத்திலும் அரசனாய் அட்டை படத்தில் சிரித்தார்..இந்த நிகழ்கால புறநானூற்று வீரன். வியாபாரத்திற்க்காகவோ,விலாசத்திற்க்காகவோ,விளம்பரத்திற்காகவோ???எது எப்படியோ தலைவரை தவிர்த்து தமிழன் இல்லை,தமிழ் நாடும் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னது அவர் அச்சிடப்பட்ட அனைத்து புத்தகங்களும்.சேவின் புத்தக எண்ணிக்கையை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு தலைவர் பிரபாகரனின் வரலாறுகள் முன்னிலையில் இருந்தன.தலைவரை பார்த்த மகிழ்ச்சியோடு,கவிதை,கதை,வரலாறு என சில புத்தகங்கள் வாங்கி விடைபெற்றேன் புத்தக திருவிழாவை விட்டு.

அடுத்து தீவுத்திடல் சென்னை சங்கமம்..

ஆர்ப்பரிக்கும் கூட்டம்,உட்க்கார்ந்து பார்த்து ஒன்றும் தெரியாமல் அமரும் நாற்காலியில் ஏறி நின்று,பின்னால் நிற்பவனிடம் திட்டு வாங்கி,விசிலடித்து...என்னே சுகம் என்றபோது.

என் தாத்தா என் நினைவில் நிழலாடுகிறார்..அந்த பனி படர்ந்த காலத்தில் ,பனி என்னை நனைக்க கூடாதென்று கோணி போர்த்தி எனை அழைத்து சென்று கூத்து காட்டிய அந்த குழந்தை பருவம் ஞாபகத்தில் வருகிறது..எவ்வளவு அருகாமையில் அமர்ந்து பார்த்தேன் அந்த நாடகங்களை..கூத்துகளை.

அடுத்து எம் கிராமத்து கிழவன்..

இதோ பாருங்கப்பா மாரியம்மன் கோயில் திருவிழா வருது..கூத்து போடணும் என்றபோது..யோவ் கிழடு சும்மா இருய்யா..திரை கட்டனும் படம்தான் போடணும் என்று குரைத்த இளசுகளின் குரலில் என் குரலும் நிறைந்திருந்தது...இப்போ சங்கமம் தேடி,தேடி தூரத்தில் தெரியும் வெளிச்ச புள்ளியாய் கூட்டத்திற்குள் எட்டி எட்டி கூத்தும்,கிராமிய கலையும் பார்க்கும் போது...எவ்வளவு இனிமைகளை இழந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.

என்ன செய்வது சோக்கேசில் வைக்கப்பட்ட பொம்மைக்குதானே மதிப்பதிகம்!!!

Widget byLabStrike


No comments:

Post a Comment