Saturday, January 2, 2010

பிறன்மனை நோக்காமை

ராமச்சந்திரா மருத்துவமனை.

ஜெனரல் வார்டு.

வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் கட்டில்களில்..மையமான ஓர் கட்டிலில்,மையம்கொண்டிருதேன் நான்.

வாகன விபத்தில் அடிப்பட்டு, இரண்டு,மூன்று நாட்களாய்,எனது பொழுதுகள் படுக்கைவசமாகி இருந்தது.எனது உலகம் நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு இருந்தது.எனது உலகத்தில்,படுத்துகிடந்தவனே, மனிதனாய் தெரிந்தான்.

பார்க்க வருபவர்கள்,பக்கத்திலிருப்பவர்கள் அனைவரும் வேற்றுகிரகவாசிகள் போல் வேடமளித்தார்கள்.

வேகமாய் ஓடித்திரியும் எனது கால்கள்,தன்னம்பிக்கை இழந்து தளர்ந்து கிடந்தன.எனது இரவுகள் புதியதாய் காதல் வயப்பட்டவனைப் போல கேள்விகள் நிரம்பியதாய் இருந்தது.என் கண்கள் உறங்க மறுத்து கம்யூனிஸ்ட் கொடி பிடித்தன.விபத்தில் அடிப்பட்ட என் கால் திரும்ப நடக்குமா?நடக்காதா?என என் மூளையும்,மனதும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தது.

என் தளர்ந்த கால்களைப் பார்த்து,என் தாயும்,தந்தையும் விபத்தில்,நான் சிந்திய செந்நீருக்காய் கண்ணீர் சிந்திகொண்டிருந்தனர்..

ஆஸ்பத்திரி படுக்கை என்னை,சிறகுடைந்த கூட்டுகிளியாய் அடைத்து வைத்திருந்தது...சூரியனை பார்த்து கூட பல நாட்கள் ஆகி இருந்தது.

சார் நீங்க எழுந்து நடக்க ஆறு மாதமாவது தேவை..பெட் ரெஸ்ட் எடுக்கணும்.ஓ.கே. மருத்துவரின் வார்த்தை வேறு என் மனதை இன்னும் பலகீனப்படுத்துகிறது.

இந்நிலையில்தான்...

அவள் வந்து சேர்ந்தாள்..என் வன தேவதை.

பூந்தளிர்மேனி,ஒய்யாரமான உருவம்.

வஞ்சனையற்று சற்று சதைப்பிடிப்பான உடலிருந்தாலும்,கேட் வாக் போகிற இடை குலுங்கும் நடை என ஜெனரல் வார்டு கண்களைஎல்லாம் களவாட வந்திருந்தாள்.

மொத்தப்பார்வையும் மோகம் கொண்டு அவளை மொய்க்கலாயின.

ஹ்ம்ம்..அவள் புருஷன் கொடுத்து வைத்தவன்..நான்தான் சொல்கிறேன்.யாருக்கும் சொல்ல தோன்றும் அவள் அழகைப் பார்த்தால்.

என் படுக்கைக்கு, பக்கத்து படுக்கையில்தான் அவள் கணவன் அனுமதிக்கப்பட்டிருந்தான்.அவனுக்கு கிட்னி ஸ்டோன் எனவும் சர்ஜரி செய்வதற்காய் அவன் அனுமதிக்கப் பட்டிருப்பதகவும்,என் தாயிடம் சொல்லி கொண்டிருந்தாள் என் வன தேவதை.அவள் வந்ததிலிருந்து வறண்டு போன என் மருத்துவ மனைவாழ்க்கை நந்தவனமாகதான் எனக்கு காட்சியளித்தது.

கண் இல்லாதவன் மட்டுமே அவளை பார்க்காமல் இருக்க இயலும்..கண் உள்ளவனுக்கோ அவள் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்..கொள்ளை கொள்ளும் அழகில் கொல்கிறாளே!பிறன்மனை நோக்காமை-நான் மட்டும் எப்படி வள்ளுவன் வாக்கை காக்க இயலும்.

எனக்கு துணையாய் என் அம்மா தங்கி இருந்ததால்,என் தாய்க்கு நெருக்கமாகி இருந்தாள் என் தேவதை.அவளின் குடும்ப கதைகள்,வீட்டுக்காரர், குழந்தைகள் கதை என நிறைய கதைகள் என் அம்மாவிடம் ஓட்டிக்கொண்டிருந்தாள் .

நான் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன்,ஆண்டவா!நான் மருத்துவமனையில் உள்ளவரை,அவளையும் இங்கேயே தங்க வை.அவளை எப்படியாவது என்னோடு பேச வை என்று.மொத்த வார்டும் அதைத்தான் வேண்டியிருக்கும்..

அவளின் கடைக்கண் பார்வைக்காய் ஏங்கி கொண்டிருக்கிறேன்.ஆனால், எந்த சாமி புண்ணியமோ..அவளும் அவ்வபோது என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்..பின் புன்னகைக்கவும் ஆரம்பித்திருந்தாள்.

தமிழ் என என் தாய் என்னை அழைத்த போதெல்லாம்,திரும்பி எனை பார்த்து கண் சிமிட்டலானாள்.அவளைப் பார்த்த மாத்திரத்தில் என் உடல் சூடேறி,புத்துணர்ச்சி பெறுவதை என்னால் உணர முடிந்தது.

உடைந்து தளர்ந்த என் கால் கூட எழுச்சி கண்டிருந்தது.உலர்ந்து போன என் உதடுகள் ஈரம் பேசின,அவள் வருகையால்...

அந்த தேவதை ஒரே,ஒரு முறை என் காலை தொட்டு போனால் போதும்.நான் சர்ஜரி இன்றி சரியாகிவிடுவேன்.அமைதியில் உறைந்து கிடைக்கிறேன் நான்.

சார்...இன்னைக்கு நைட்ல இருந்து நாளைக்கு சர்ஜரி முடியுற வரைக்கும் எதுவும் சாப்பிடக்கூடாது..தாகம் வந்தா கூட நாக்கில் ஈரம் பட கொஞ்சமா தண்ணீர் எடுத்துகோங்க..முதுகுத்தண்டில் ஊசி போடும் மருத்துவரின் குரல் என் அமைதியை உடைக்கிறது.

எனக்கு சொன்ன அதே கருத்துகளை,என் பக்கத்துப் படுக்கை ஆசாமி,அதுதான் என் தேவதையின் கணவனுக்கும் உபதேசித்துப் போனார் மருத்துவர்..

அப்போதான் எனக்கு தெரிந்தது ,அவள் கணவனுக்கும் நாளை சர்ஜரி என்பது,.

திடீரென ஓர் போன் அழைப்பு வந்து,வெளியே போனவள் ,ஒரு பையனை கூட்டிக்கொண்டு மருத்துவமனை உள்நுழைந்தாள்...அவன் தன்னுடைய மகன் எனவும்,ஒன்பதாம் வகுப்பு படிப்பதாகவும், என் தாய்க்கு அறிமுகம் செய்தாள்.

உங்களுக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கானா?நம்பவே முடியலையே!உங்களைப் பார்த்தா 25 வயசு பொண்ணு மாதிரி தெரியுறீங்க?என்ன ஆச்சர்யம்,எங்கள் வார்டு மொத்தத்தின் ஆச்சர்யத்தையும் சேர்த்து என் தாயே கேள்வியாய் கேட்டு விட்டார்.

ஐயோ!நீங்க வேற.. நிறைய பேர் என்கிட்டே இப்பிடிதான் கேக்குறாங்க..என் பையனோட வெளியே போனா, அவனோட அக்காவான்னு கேக்குறாங்க..வெக்கமா இருக்கு..எனக்கு வயசு 35 ஆகுது ,சொல்லி நெளிந்தாள் அவள்.

என் தாய் முதற்கொண்டு என்னையும் மூர்ச்சையடைய வைத்தது அவள் பதில்.

என் மனது அப்படியே இடிந்து விழுந்தது.கடவுளை தலைக்கு மேல் உள்ள பேர் சொல்லி திட்ட தோன்றியது..இருந்தும் என் மனம் அவள் வயதை பொருட்படுத்தவில்லை.அவளையே வைத்த கண் வாங்காமல் உற்று நோக்குகிறேன்.அவள் பின்னழகு,முன்னழகு என என்னை இம்சிக்கிறாள் நிறைய..

அவள் நடை பார்க்கின்ற போதெல்லாம் நான் எப்போவோ பார்த்த மெலினா திரைப்படம் ஞாபகத்திற்கு வரும்.அதில் வரும் சிறுவன் போலவே என் மனதும் அவளை துரத்தி செல்லும்..

பரவாஇல்லை...மனம் தேற்றிக்கொள்கிறது..35 வயசா இருந்த என்ன இப்போ. கரெக்ட் பண்ணு..நச்சின்னு இருக்கா-இது என் மனம்.

அந்த தேவதை வடிவில் இறங்கி,காமதேவன் பல கலவரங்களை என்னுள் நடத்திக்கொண்டே இருக்கிறான்.

எப்போ உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை..கண்விழித்து பார்த்தபோது விடிந்திருந்தது...

எழுந்தவுடன், அவள் முகத்தில் விழிப்பது இப்போ கொஞ்ச நாள் வாடிக்கை எனக்கு..தேடுகிறேன்.கண்விழித்த திலிருந்து  தேடுகிறேன்..என் தேவதையை அங்கே காணவில்லை..இந்த அதிகாலையில் எங்கே போயிருப்பாள்??அவள் கணவனுக்கும் இன்று சர்ஜரி ஆச்சே!!என் மனம் சொல்கிறது..என் கண்கள் அவளை  தேடுகின்றன...

சார்..எழுந்து உட்க்காருங்க...முதுகுதண்டில் ஊசி போடணும்..சர்ஜரி பண்ண டைம் ஆகிடுச்சி...மீண்டும் டாக்டரின் குரல் என்னை மீண்டும் எழுப்புகிறது..

சர்ஜரி பயத்தில் எழுந்து பதற்றமுடன் அமர்கிறேன்.

என்ன ஆச்சர்யம்..

எதிரில் வந்து நிற்கிறாள் என் தேவதை.

அவளைப்  பார்த்த மாத்திரத்தில் டாக்டர் போட்ட ஊசியின் வலி,மறந்து போயிருந்தது,மறைந்து போயிருந்தது.

என் அருகாமையில் நெருங்கி வருகிறாள்..

செல்லம் பயப்படாதடா.சர்ஜரி சாதாரணமாகத்தான் இருக்கும்..

என சொல்லி

கன்னம் பற்றி கிள்ளுகிறாள்.

என் ஆன்மா என்னிலிருந்து விடுவித்து எங்கோ பறப்பதை உணர்கிறேன்.

என்ன நினைத்து இப்படி செய்கிறாள்..ஒருவேளை என்னுள் வாழ்ந்த காமன் அவளுள்ளும் வாடகைக்கு வீடெடுத்திருப்பானோ !!எப்படியோ நம்ம வேலை முடிந்தால் சரி..என் என்ன அலைகள் ஏகத்திற்கு அலைகிறது.

நான் பிறந்ததிற்கான பலனை அடைந்து விட்டதாக என்னில் உள்ளவன்,எனக்கு சொல்கிறான்.

பட்டாம்பூச்சி பறக்கிறது என்னுள்...என் உள்ளில் ஏதோ...உங்களுக்கு ஆட்சேபனை இல்லேனா..ரோசாப்பூ ரவிக்கைகாரி பாடல் என் செவிகளை சில்லிடுவதாக உணர்கிறேன்.

வாவ்.. ஆன்ட்டி(கல்யாணம் ஆன பொண்ணுங்கள ஆண்ட்டி னு தான் சொல்லுவோம் ) கரெக்ட் ஆகிடுச்சி..வாய்விட்டு கத்த தோன்றுகிறது எனக்கு..அவைநாகரீகம் கருதி செய்யவில்லை. உள்மூளை சொல்கிறது.கொடுத்து வச்சவன்டா நீ..குதூகளிக்கிறேன் மனதிற்குள்.

தன் கையில் மடித்து வைத்திருக்கும் காகிதத்தை பிரிக்கிறாள்...வாயைத்திற என எதையோ எடுத்து என் நாக்கில் தடவி விடுகிறாள்..

பொறாமையில் மொத்த வார்டுமே என்னை நோக்குகிறது...பெருமிதத்தில் மிதக்கிறேன் நான்.

பேச்சு வரவில்லை..ஆஸ்ப்பத்திரி அரண்மனையாய் தெரிகிறது..ஆஸ்பத்திரி படுக்கை அரியணை யானது..என் மகாராணி பக்கத்திலிருப்பதாய் படுகிறது..கையில் வாளுடன் ,வாகை சூடிய மன்னனை போல், யாரங்கே!இழுத்து வாருங்கள் என வசனம் பேச தோன்றுகிறது.

என் கனவை களைத்து அவள் பேசுகிறாள்...

உனக்கும் இன்னைக்கு சர்ஜரில்ல..அம்மா சொன்னாங்க...

அம்மா ,உன்னதமிழ், தமிழ்ன்னு கூப்பிடும் போதெல்லாம், ஏழு வயதில் இறந்து போன, என் மூத்தமகன் தான், என் ஞாபகத்தில் வரான்..அவன் பேரும் தமிழ் தான்...ஒருவேளை அவன் உயிரோடு இருந்திருந்தா, உன்ன மாதிரிதான் இருந்திருப்பான்.உன்ன பாக்குறப்பல்லாம் என் புள்ளைய  பாக்குற மாதிரியே இருக்கு..நீயும் எனக்கு ஒரு  புள்ளதான்...அதான் பக்கத்துல, பிள்ளையார் கோயில் போய், உனக்காக அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்..

கோயில் பிரசாதம் ,எங்க நெற்றியை காட்டு ,எனக்கூறி..வாயில் ஊட்டிய ,மீதி திருநீரை என் நெற்றியிலிடுகிறாள் என் தேவதை..

உடைந்து சிதறுகிறது உள்ளம்.என்னுள் உள்ள காமனை விஷம் கொடுத்து சாகடிக்க அவகாசம் கொடுக்காமல்,சயனைடு கொடுத்து கொல்கிறேன் நான்.என் தலை வெட்கி குனிகிறது..அந்த தாய்மை என் தலையை நிமிர்த்தி சொல்கிறது.

டோன்ட் வொர்ரி...ஐயாம் வித் யூ.... சர்ஜரிய நெனச்சு பயப்படாத.

Widget byLabStrike


10 comments: